ஏன் நீங்கள் மேடைகளில் பாட்டு பாடும் போது உதயநிதி நடிக்க கூடாதா? ஜெயக்குமாருக்கு விஷால் பதிலடி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டு பாடலாம், உதயநிதி ஸ்டாலின் நடிக்கக் கூடாதா என நடிகர் விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: குடும்பமே ஒரு கழகம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால் இனி மேல் திமுகவின் எச்.ஆர். ஆக உதயநிதி ஸ்டாலின் இருப்பார். எப்போது பார்த்தாலும் ஆளுநர் தேவையில்லை என திமுகவினரும் அவருடைய கூட்டணி கட்சிகளும் கூறி வந்தனர்.

பட்டம் சூட்டுதல்
இப்போது முதல்வர் தனது பிள்ளைக்கு பட்டம் சூட்டவும் இளவரசராக முடிசூட்ட மட்டும் ஆளுநர் தேவையா? உதயநிதிக்கு வந்து பட்டத்து இளவரசராக முடிசூட்டுவதன் மூலமாக திமுகவை இனி ஒரு முடிந்த சகாப்தமாகத்தான் பார்க்க முடியும். திமுகவுக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள், கஷ்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

வாழையடி வாழை
ஆனால் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஒரு அரசப் பதவிக்கு வருகிறார்கள். உதயநிதியை பட்டத்து இளவரசராக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கனவு நனவாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா, லண்டன் போக ஆக போவதில்லை. ஒன்றும் நடக்க போவதில்லை.

உதயநிதி ஸ்டாலின்
அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் நண்பர் விஷால்
இந்த நிலையில் நடிகரும் உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

அமைச்சராகியதில் மகிழ்ச்சி
தற்போது அவர் அமைச்சராகி இருப்பதை பார்க்கும் போது நண்பனாக மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வரின் மகன் என்று இனி எந்த இடத்திலுமே பெயரை பயன்படுத்தாமல் எளிமையாக தனது தனிப்பட்ட முறையில் தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் செயல்பட்டவர் உதயநிதி. தனது பெயருடன் தந்தையின் பெயரையும் இணைத்து உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என பதவியேற்ற உதயாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜெயக்குமாருக்கு பதிலடி
அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி இனி நடிக்கக் கூடாது என கூறியுள்ளது குறித்து விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் மேடையில் பேசும் போதெல்லாம் ஏதாவது ஒரு எம்ஜிஆர் பாடல், சினிமா பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மட்டும் பாடலாம், ஆனால் உதயநிதி நடிக்கக் கூடாதா, முதலில் ஜெயக்குமார் பாடுவதை நிறுத்தட்டும் என விஷால் பதிலடி கொடுத்திருந்தார்.

பாஜகவுக்கு விமர்சனம்
தொடர்ந்து அதிமுகவையும் பாஜகவையும் விஷால் விமர்சித்து வந்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இன்றைய தினம் பதவியேற்பு விழாவிற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்துடன் நான் நடிப்பது கடைசி படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த படத்திலிருந்தும் விலகுகிறேன். கமலிடம் நான் அமைச்சராவதால் படத்தில் கவனம் செலுத்த முடியாது என சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளை தெரிவித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications