நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காகவே பதவிகாலம் நீட்டிப்பு.. சென்னை ஐகோர்ட்டில் விஷால் விளக்கம்!
சென்னை: நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால்தான் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதாக நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்தக் கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கபட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு உள்நோக்கத்துடனும் தொடரப்பட்டுள்ளது எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பின் விரிவான வாதத்திற்காக வழக்கை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
