“ரத்தக் கண்ணீர் வராம பார்த்துக்கோங்க”.. தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு நடிகை அம்பிகா ஆதரவு!
சென்னை: "தூய்மை தேவதைகள் என பெயர் வைப்பது முக்கியம் இல்லை. அவர்களின் கண்களில் இருந்து ரத்தக் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்" என தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை அம்பிகா பேசியுள்ளார்.
தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 14வது நாளாக சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டக்காரர்கள் தரப்பில், எங்களுடைய கோரிக்கை நிறைவேற வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்வர் விஜய் எங்களைச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், தங்களின் நியாயமான கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வெள்ளை உடை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூய்மை பெண் பணியாளர்கள் குப்பை தொட்டி, துடைப்பம் உள்ளிட்டவைகளுடன் வெள்ளை நிற புடவையணிந்து பேரணியில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நடிகை அம்பிகார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். "தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு 14 நாட்களாக ஏன் வரவில்லை என்ற கோபம் உங்களுக்கு இருந்திருக்கும். படப்பிடிப்பு தொடர்பாக வெளியே இருந்த காரணத்தினால் வர இயலவில்லை. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என அம்பிகா தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகை அம்பிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூய்மை தேவதைகள் என பெயர் வைப்பது முக்கியம் இல்லை. அவர்களின் கண்களில் இருந்து ரத்தக் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். தூய்மைப் பணியாளர்களின் மனது வலிப்பது தெரிகிறது.
நாளை விடிந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியும் பயமும் தூய்மைப் பணியாளர்களுக்கு இருக்கிறது. அவர்கள் அனைவருமே வருத்தத்தில் தான் போராட வந்திருக்கிறார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கையை இந்த அரசு தாமதிக்காமல் உடனடியாக
நிறைவேற்ற வேண்டும்.
அவர்கள் ரொம்ப பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. சின்ன சின்ன கோரிக்கை தான். அவர்களுக்கு அவர்கள் கேட்பதை விட கூடுதலாகவே ஊதியம் கொடுக்கலாம். முதல்வர் ஆவதற்கு முன்பே இவர்களை அழைத்துப் பேசிய அரசு, இப்போது நிச்சயமாக செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
