நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருட்டு.. அடிக்கடி சந்தித்த பணிப்பெண்.. சிக்கியது எப்படி?
சென்னை: நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய பணிப்பெண் ஜிபே மூலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷோபனா. இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டிய கலையை வளர்க்கும் விதமாக ஆங்காங்கே பள்ளிகளை நடத்தி வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழிகளில் நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் நடித்த தளபதி படம் சூப்பர் ஹிட். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. ஆனாலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு தேனாம்பேட்டையில் இரண்டு அடுக்குகள் கொண்ட மாடி வீடு உள்ளது. அதில் தரை தளத்தில் நடன பள்ளி இயங்கி வருகிறது. முதல் தளத்தில் ஷோபனாவின் தாய் வசித்து வருகிறார். இரண்டாவது தளத்தில் ஷோபனா வசித்து வருகிறார். வயதான ஷோபனாவின் தாயை கவனித்துக் கொள்ள பணிப்பெண் ஒருவர் இருக்கிறார்.
இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது பெயர் விஜயா. கடந்த ஓராண்டாக ஷோபனா வீட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முதல் தளத்தில் வசிக்கும் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போயுள்ளது. வீட்டிற்கு விஜயாவை தவிர வேறு யாரும் வருவதில்லை என்பதால் அவர் மீது ஷோபனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவ்வப்போது டிரைவரிடம் பணத்தை கொடுப்பதையும் ஷோபனா பார்த்துள்ளார்.
அதன் படி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் மூலம் ஷோபனா புகார் அளித்தார். இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த பணிப்பெண் விஜயாவிடம் விசாரணை நடத்தினர். போலீஸாரை கண்டதும் பதறிய விஜயா முதலில் மறுத்துவிட்டு பின்னர் தான் திருடியதை ஒப்புக் கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரை சிறுக சிறுக ரூ 41 ஆயிரம் வரை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் ஷோபனா வீட்டில் கார் ஓட்டுநராக உள்ள முருகனிடம் அந்த பணத்தை கொடுத்து கடலூரில் உள்ள தனது மகளின் வங்கிக் கணக்கிற்கு ஜிபே மூலம் பணத்தை செலுத்தி வந்ததையும் விஜயா ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது ஷோபனாவோ விஜயா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் என் வீட்டிலேயே தொடர்ந்து வேலை செய்யட்டும். அவர் திருடிய பணத்தை அவருக்கான ஊதியத்தில் இருந்து பிடித்துக் கொள்கிறேன் என கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் டிரைவருக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலும் அங்கிருந்த பணிப்பெண் சிறுக சிறுக நகைகளை திருடி அதை விற்று அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அது போல் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் பணியாளர்கள் நகைத் திருடியதாக அவருடைய மனைவி புகார் அளித்தார். ஆனால் விசாரணைக்கு விஜய் யேசுதாஸ் ஆஜராகாததால் போலீஸார் இந்த புகாரில் சந்தேகப்பட்டு விசாரணையை முடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications