Sowcar Janaki: "பத்மஸ்ரீ" பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்! மருத்துவமனையில் என்ன நடந்தது?
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் இதய நோய் பாதிப்பிற்காக நடிகை சௌகார் ஜானகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 94. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். கலைத்துறையில் சௌகார் ஜானகி செய்த சாதனைகளுக்காக 2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.
1950 ஆம் ஆண்டு சௌகார் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அது முதல் அவர் சௌகார் ஜானகி என அழைக்கப்படுகிறார். தமிழில் அதே ஆண்டில் வளையாபதி என்ற படத்தில் அறிமுகமானார்.

சௌகார் ஜானகி இதய நோய்க்காக சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். நடிகை வைஷ்ணவி, சௌகார் ஜானகியின் உறவினர் ஆவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். சௌகார் ஜானகியின் 400-ஆவது படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பிஸ்கோத் என்ற படமாகும்.
இவர் 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். வானொலி கலைஞராகவும் பணியாற்றியிருந்தார். நந்தி விருதுகள், கலைமாமணி விருது , வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
ஜானகி, 1931 ஆம் ஆண்டு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆந்திர மாநிலம் ராஜமந்திரி பகுதியை சேர்ந்தவர். இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் புகழ்பெற்ற நடிகையாவார். ஜானகி தனது தொடக்க கல்வியை குவாஹாத்தியில் படித்திருந்தார். இதையடுத்து அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லு முல்லு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அனைவருடனும் அன்பாக பழக கூடியவர். புதிய பறவை படத்தில் "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்ற பாடலில் அற்புதமான முக பாவனைகளையும் நடனத்தையும் வெளிப்படுத்தியிருப்பார்.
ஜானகியின் இறப்பு திரைத்துறையினருக்கு பேரிழப்பாகும். காமெடி, வில்லி, குணச்சித்திரம், என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அற்புதமாக நடிக்கக் கூடியவர். ஜானகியின் இறப்புக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் முதல்வர் விஜய் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
