சாப்பாட்டுக்கே வழியில்ல.. காசுக்காக பாஜகல சேர்ந்தேன்! ரூ.10,000 கொடுத்தாங்க - நடிகை வாசுகி ஓபன் டாக்
சென்னை: தனக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை என்று, காசுக்காகவே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததாகவும் நகைச்சுவை நடிகை வாசுகி பேட்டியளித்து இருக்கிறார்.
நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் ஒரு காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை வாசுகி. இன்று வரை நடிகர் கவுண்டமணியுடன் பிச்சைக்காரர் வேடமணிந்து வாசுகி நடித்த நகைச்சுவை காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
டெலிவரி வேலை மூலம் தினசரி வருமானம், வாராந்திர இன்சென்டிவுடன் 30,000 வரை சம்பாதியுங்கள்
இருகாலத்தில் பல திரைப்படங்களில் நடித்த வாசுகிக்கு பிற்காலத்தில் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போனது. 2001 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்ட மேடைகளில் நகைச்சுவை கலந்து திமுகவை விமர்சித்து பேசி வந்தார்.

பாஜகவில் வாசுகி
இந்த நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை வாசுகி, அக்கட்சி நடத்திய போராட்டத்தில் திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

முதலமைச்சர் அண்ணாமலை
அதே கூட்டத்தில் அண்ணாமலை அருகில் நின்றபோது தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை என்று வாசுகி பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த நிலையில் நடிகை வாசுகி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ரூ.10,000 பணம்
"பாரதிய ஜனதா கட்சியின் உண்ணாவிரத கூட்டத்தில் பேசியதற்காக 10,000 ரூபாய் கொடுத்தார்கள். அண்ணாமலை தம்பி இப்போது பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால் அவர் முதலமைச்சர் ஆவார் என்று கொஞ்சம் தூக்கி வைத்து பேசினேன். தமிழ்நாடு மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள். சொல்லப்போனால் அன்றுதான் நான் அண்ணாமலையை முதன்முதலில் நேரில் பார்த்தேன்.

சாப்பாட்டுக்கே வழியில்லை
நான் அதிமுகவில் இருந்தபோது ஒரு பொறுப்பையும் வகித்தது கிடையாது. வெறும் கழக நட்சத்திர பேச்சாளராகவே இருந்து வந்தேன். 2001 முதல் இன்று வரை நட்சத்திர பேச்சாளராகவே இருந்து வந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு கூட்டம் எதுவும் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மனசு நொந்துபோய்தான் பாஜகவில் சேர்ந்தேன்.

காசுக்காக பாஜக சென்றேன்
பிரச்சார நேரத்தில், கூட்டங்களில் கலந்துகொண்டால் மட்டுமே பணம் தருவார்கள். மாத சம்பளம் எல்லாம் இல்லை. குடும்பத்தில் ஒரே கஷ்டம். அதிமுகவை இனி நம்பவே முடியாது. எனக்கு வயது 55. இனிமேல் வேலைக்கு போக முடியாது. எனக்கு கணவன், குழந்தைகள் இல்லை. அதிமுகவில் எப்படி கூட்டத்துக்கு போனால் காசு கிடைக்குமோ அதேபோல் கிடைக்கும் என்றே பாஜகவுக்கு போனேன்.

பேசியது தவறு
முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீது ஒரு ஆவேசத்தில்தான் ஒருமையிலும், உடல்ரீதியாகவும் பேசிவிட்டேன். ஜெயலலிதா இருக்கும்போதும் நான் இதுபோல் பல முறை பேசி இருக்கிறேன். வெற்றிகொண்டான், திண்டுக்கல் லியோனிபோல் நானும் பேச்சாளர்தான். நான் அவ்வாறு பேசியதற்காக திமுகவினர் மிரட்டல் விடுக்கவில்லை.

திருத்திக்கொள்கிறேன்
ஜெயலலிதா இருந்தவரை வேலை கொடுத்தார்கள். ஆபரேசன் என்றால் பணம் தருவார்கள். என்னை விட்டுவிட மாட்டார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் உதவி கேட்கபோனால் விரட்டுகிறார்கள். அதனாலே அவர்களையும் விமர்சித்தேன். நான் அவ்வாறு பேசியது தவறுதான். இனிமேல் அதுபோன்று பேச மாட்டேன்.












Click it and Unblock the Notifications