உதயநிதி ஸ்டாலினுக்கு சப்போர்ட்.. ‘சனாதன தர்மம்’ விவகாரத்தில் ஆதரவாக வந்த ஆதவ் அர்ஜுனா!
சென்னை: சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை ஆமோதித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. "உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதில் உள்ள சாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார். நாங்களும் அதையேதான் எதிர்க்கிறோம்." என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை டெங்கு, கொசுவைப்போல ஒழிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, "வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. முக்கியமாக, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதியின் பேச்சு வட மாநிலங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா, "சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "உண்மையில் உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் சாதி முறைக்கும், மதக் கோட்பாடுகளுக்கும் எதிரானது. நாங்கள் எப்போதும் அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மத நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், ஒரு பொறுப்பில் உள்ள நபராக, ஒரு அமைச்சராக, ஒரு எம்.எல்.ஏவாக நான் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கற்றுக்கொடுப்பது.
இந்தச் சமுதாயப் படிநிலை (Hierarchy system) மற்றும் சாதி முறைக்கு நாங்கள் முற்றிலும் எதிரானவர்கள். ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கலாம். அறிவியல் என்பது வேறு, மக்களின் நம்பிக்கை என்பது வேறு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசும்போது, அதில் உள்ள சாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார். நாங்களும் அதையேதான் எதிர்க்கிறோம். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்துத்துவா என்ற பெயரில் ஒரு மதத்தைத் திணிப்பதையும், மேலாதிக்கத்தையும் எதிர்க்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகமும், எங்கள் தலைவரும் அனைவரையும் சமமாக நடத்தும் கொள்கையையே கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. தமிழகம் எப்போதும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.
வட இந்தியாவில் சனாதனம் என்றால் அது இந்து மதத்தைக் குறிப்பதாக ஒரு புரிதல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் சனாதனம் என்பது சமத்துவமின்மையை குறிக்கிறது. இந்தப் புரிதல் வேறுபாட்டால்தான் சர்ச்சைகள் எழுகின்றன. நாங்கள் எப்போதும் சமத்துவமின்மைக்கு எதிரானவர்கள், எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல." எனத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.












Click it and Unblock the Notifications