"தேங்க்ஸ்".. ஸ்டாலினை மறுபடியும் மறுபடியும் பாராட்டும் ஓபிஎஸ்.. என்ன காரணம்.. "அது"வா?
முக ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: "இந்த வைரஸ் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது... அதை ஆட்சியில் இருக்கும் அரசு சவாலாக எடுத்து, பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.. அதற்கு என்னுடைய நன்றி" என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எந்தவித விமர்சனங்களையும் முன்வைக்காமல் உள்ளன.. அதற்கு காரணம், திமுக அரசின் செயல்பாடுகள்தான்.. !
தற்போதைய நெருக்கடியான சூழலில், ஆளும் தரப்பு மீது விமர்சனங்களும், எதிர்ப்புகளும், குறைகளும் நிறையவே வர ஆரம்பிக்கும்.

திமுக
ஆனால், அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நான்கைந்து அமைச்சர்கள் ஸ்டாலினை வெளிப்படையாகவே பாராட்டிவிட்டார்கள். இந்நிலையில், ஓபிஎஸ்ஸும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

நோய் தடுப்பு
2 நாளைக்கு முன்பு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.. அதில், "கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டிருந்தேன்.

நன்றி
இதனையறிந்த முதலமைச்சர், "தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதற்காக, முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார். இப்போது இன்னொரு முறை, முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி சொல்லி உள்ளார்.. தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஆபீசில் கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசும்போது சொன்னதாவது:

நடவடிக்கைகள்
"கடந்த வருடம் மார்ச் மாதம் தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கியது. அதிமுக அம்மாவின் அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கையால் பாதிப்பு குறைந்தது. இப்போது இந்த வைரஸ் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது... அதையும் ஆட்சியில் இருக்கும் அரசு சவாலாக எடுத்து, பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

பொதுமக்கள்
இது தேசிய பேரிடர், அரசுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது என்று நமது கடமை, பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம் என்றால் முழுமையாக இந்த வைரஸை நாட்டில் துடைத்து அகற்ற முடியும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து லாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிவரும் டிரைவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உடனடியாக டெஸ்ட் நடத்த வேண்டும்.

கருப்பு பூஞ்சை
தேனியில் இருந்து கேரளாவுக்குத் தினமும் செல்லும் 5 ஆயிரம் விவசாயிகளுக்கும் டெஸ்ட் செய்யப்பட வேண்டும்.. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கும் சூழல் உள்ளதால் அரசு கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... கொரோனா பாதிப்பை தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்" என்றார்.

புள்ளிகள்
ஓபிஎஸ்ஸின் இந்த அடுத்தடுத்து பாராட்டு பலரையும் கவனிக்க வைத்து வருகிறது.. ஊழலில் புள்ளிகள் மீதான புகார்களை தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லி வரும் நிலையில், பல அமைச்சர்கள், திமுக தரப்பில் மறைமுகமான சமாதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில் ஓபிஎஸ் திமுக அரசை தொடர்ந்து பாராட்டி வருவது, சமாதான நடவடிக்கையா? அல்லது அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..












Click it and Unblock the Notifications