அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. சாட்டையை சுழற்ற போகும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. கட்சியை தக்க வைக்க இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
திமுக வலிமையான கூட்டணியுடன் உள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் 3 வது பெரிய கட்சியாக தங்களை முன்னிறுத்த முயற்சி செய்கிறது. புதுவரவான தவெக அதிமுக பாணியில் திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த பரபரப்பான நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்துள்ளார். தேர்தலுக்குமிகவும் குறுகிய காலமே உள்ளது. திமுகவிற்கு எதிராக பிரச்சாரத்தை வேகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கடந்த 5 வருட திமுக ஆட்சியில் மக்கள் செலுத்திய வரியை, அதிமுக ஆட்சியில் செலுத்திய வரியுடன் ஒப்பிட்டு டிஜிட்டல் மற்றும் திண்ணை பிரச்சாரமாக கொண்டு செல்ல எடப்பாடி ஆலோசனை வழங்கவுள்ளார். மேலும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி பணி உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக சுணக்கமாக உள்ள மாவட்டச் செயலாளர்களை எச்சரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications