#Exclusive அண்ணாமலை வளரணும்.. முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார்.. பட்டென சொன்ன அதிமுக மாஜி அமைச்சர்!
சென்னை : "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற வகையில் பேசுவதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை." என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஒன் ஒந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீப சில வாரங்களாக அதிமுக - பாஜக இடையேயான உரசல் உச்சம் தொட்டது. ஜெயலலிதாவை சீண்டும் அளவுக்கு அண்ணாமலை பேசியபோதும் அதிமுக தலைவர்கள் அமைதி காத்தது தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அதிமுக கூட்டணி வேண்டாம் என்றும் அண்ணாமலை பேசினார். ஆனால், அதிமுக தலைவர்கள் எவரும் பாஜக கூட்டணி தேவையில்லை என்று பேசமுடியவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியாவுக்குப் பேட்டி அளித்துள்ளார் கோகுல இந்திரா.

காய்த்த மரம்
கேள்வி : எடப்பாடி பழனிசாமியை வலுவான தலைமையாக முன்நிறுத்தி அடுத்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகும்போது, இல்லை இல்லை உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவரே சொல்வதை எப்படி பார்க்கிறீர்கள்?
கோகுல இந்திரா : காய்த்த மரம் தான் கல்லடி படும். எங்களின் வெற்றி, எங்கள் கட்சியின் கட்டமைப்பு, தலைவரின் தலைமைப் பண்பு எல்லாமே வலிமையடைந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சாதாரண தலைவர் இல்லை என்ற மனநிலை எல்லோருக்கும் வந்துள்ளது. பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற வெறியில் அண்ணாமலை பேசலாம். அதையும் தாண்டி நாங்கள் வருவோம். கூட்டணி பற்றியெல்லாம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முடிவெடுப்பார்கள். எதுவாக இருந்தாலும், இங்கே அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலை அவரது வளர்ச்சிக்காக பேசுவதை நாங்கள் பார்த்து மனதிலே வைத்துக் கொள்கிறோம். அதை வைத்து எங்கள் நடவடிக்கைகளை இன்னும் வேகப்படுத்துவோம்.

அண்ணாமலைக்கு மைனஸ்
கேள்வி : என் மனைவியும், தாயாரும் ஜெயலலிதாவை விட ஆயிரம் மடங்கு வலிமையானர்கள் என அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பில் ரியாக்ஷனே இல்லையே?
கோகுல இந்திரா : ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனே கருத்து தெரிவித்தார்கள். அண்ணாமலை மனதில் ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர் என்ற பெரிய பயம் இருக்கிறது. அண்ணாமலை இப்படிப் பேசுவது அவருக்குத்தான் மைனஸே தவிர, அதிமுகவுக்கு கிடையாது. ஜெயலலிதா ஒரு மலை. சிறுபிள்ளைத்தனமான, அனுபவமில்லாத, முதிர்ச்சியற்ற வகையிலான அண்ணாமலையின் இந்தப் பேச்சை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை ஜெயலலிதா போல பெரிய தலைவராக விரும்புகிறார். அதற்குரிய உழைப்பை அவர் செலுத்த வேண்டும். நிறைய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக தலைமையில் தான்
கேள்வி : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணிக்கு ஈர்க்கும் சக்தி எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவிக்கிறார்.. அதேசமயம் பாஜக பாமக, தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்துவிடலாம் என நம்புகிறது. ஒருவேளை பாஜக - அதிமுக கூட்டணி உடைந்தால், அதிமுக வலுவான கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? அல்லது தனித்து விடப்படக்கூடுமா?
கோகுல இந்திரா : தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. கட்சியின் அடிப்படை வேலைகளை தொடங்கியிருக்கிறோம். கூட்டணி யாருடன் என்பதையெல்லாம் எதிர்காலத்தில் முடிவு செய்வோம். கூட்டணி அமைந்தாலும், அமையவில்லை என்றாலும் அதிமுக தலைமையில் தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டைத் தலைமை இருந்ததன் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டிலும் இழுபறி இருந்தது. இப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு. சீனியர்களுடன் ஆலோசித்து உறுதியான முடிவை எடுக்கும் சூழல் இருக்கும்.

ஓபிஎஸ் தினகரன் - கூட்டணியில்
கேள்வி : ஒருவேளை, அதிமுக - பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு இடம் கேட்கும் சூழல் வந்தால், கூட்டணியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
கோகுல இந்திரா : இவ்வளவு பெரிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும், மூத்த தலைவர்களும் தான் பதில் சொல்ல முடியும்.
கேள்வி : 2 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடுகளில் நீங்கள் கவனம் செலுத்தத் தவறிய இடங்களில் தான் அண்ணாமலை ஸ்கோர் செய்கிறாரோ?
கோகுல இந்திரா : மின் கட்டண உயர்வு தொடங்கி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். சென்னையிலேயே நான்கைந்து முறை பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். எந்த விஷயத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டுமோ அதை கூர்மையாகச் செய்து வருகிறோம்.

எதிர்க்கட்சி
கேள்வி : ஆளுங்கட்சியை வீரியமாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியாக பாஜக தங்களை முன்வைக்கிறது. அந்த இடம் அதிமுகவுடையது இல்லையா?
கோகுல இந்திரா : எல்லா இடங்களிலும், திமுக ஆட்சி ஊழலாட்சி என்ற பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறார் ஈபிஎஸ். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பதை எல்லா இடங்களிலும் பேசி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானபோது ஒரு மாதம் ஆட்சியில் இருப்பார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், முழுமையாக ஆட்சியை நடத்தினார். இன்று திமுக அரசு, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகிறது. சொன்னது வேறு, செய்வது வேறாக இருக்கிறது, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரவில்லை என்பதையெல்லாம் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறோம். திமுக ஆட்சியின் குறைகளை தொடர்ச்சியாக எல்லா தளங்களிலும் வெளிப்படுத்தி வருகிறோம்.












Click it and Unblock the Notifications