சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்.. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: சிங்கம் சிங்கிளாகத்தான் வரும். எனவே நாங்களும் சிங்கிளாக வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெல்வோம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. ஆனால் எங்களுடைய இயக்கம் மிகப்பெரிய இயக்கம். நாங்கள் கட்சியின் நலன், கட்சியினரின் நலன் ஆகிய இரண்டை பார்க்க வேண்டியுள்ளது.
இது பாதிக்காத வகையில்தான் இடஒதுக்கீட்டை வழங்க முடியும். இந்த அடிப்படையில் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில்தான் பாஜக நிர்வாகிகள் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அவர்கள் தனித்து நிற்கிறோம் என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு. இதற்கு நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.

வருத்தம்
பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து விட்டார். மேலும் கட்சியினரும் வருத்தம் தெரிவித்து விட்டனர். இதற்கு தகுந்த கண்டனமும் பதில்களும் அதிமுகவில் இருந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் இத்துடன் முடிவடைந்துள்ளது. இதற்கும் கூட்டணிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

பாஜக கூட்டணி இல்லை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் இருந்தது சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருந்தது நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி இருந்தது தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை. அவர்கள் தனியாக நிற்கிறார்கள். எதிர்வரும் காலத்தில் அது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேஜிக்
இன்றைய நிலை குறித்து மட்டும்தான் நான் சொல்ல முடியும். அடுத்த நடக்கவுள்ளது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். நான் முடிவு எடுக்க முடியாத விஷயம் அது. பாஜக கூட்டணியில்லாததால் பாதிப்பு ஏதும் இல்லை. எங்களுடைய வெற்றி சின்னம் இரட்டை இலை உள்ளது. மேஜிக் சின்னம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 அளித்தார்கள்.

சாதனையா வேதனையா
எங்கள் ஆட்சியின் சாதனைகள், திமுக அரசின் வேதனைகள். இதுதான் இப்போது போட்டி. சாதனை கைகொடுக்குமா? வேதனை கைகொடுக்குமா. சாதனை நிச்சயமாக எங்களுக்குக் கைகொடுக்கும். மகத்தான வெற்றியை நாங்களும் எங்கள் உடன் இருப்பவர்களும் பெறுவோம். சிங்கம் சிங்கலாதான் வரும். எங்களை பொறுத்தவரைத் தனியாக நின்று வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது. சிங்கம் சிங்கலாக நின்று வெற்றிபெறுவோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications