மாஜி அமைச்சருக்கு ‘குறி’.. மின்வாரிய அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்.. ரூ.908 கோடி ஊழல்.. சிக்கும் தலைகள்!
மின் வாரிய அதிகாரிகள் சிக்கியுள்ள நிலையில், மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : 2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறையில் ஊழல் நடைபெற்றதாக 10 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் சிக்குவார் என்று கூறப்படுகிறது.
2011 - 2016 வரை விசாகப்பட்டினத்திலிருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ரூ.1028 கோடி ஊழல் செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இதில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி ரூ.908 கோடி மோசடி செய்தது தொடர்பாக டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவந்த ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்தில் வரியாக கட்டிய பணத்தின் உண்மையான பில்களை சமர்ப்பிக்காமல் போலியாக அதைவிட பல மடங்கு பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாகவும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகத்தினரும் கூட்டு சதி செய்து ஊழல் செய்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர்
இதில் 2011 முதல் 2016 வரை 1,028 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது. இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்று கூறி இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் என மொத்தம் 10 பேர் மீது பிப்ரவரி 27ஆம் தேதி அன்று எஃப்.ஐ.ஆர் பதிந்துள்ளது.

விரைவாக குற்றப் பத்திரிக்கை
தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மின்சார வாரியம் 908 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. முறைகேடாக போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டி மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிக்கும் மாஜி அமைச்சர்
லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள ஊழல் நடந்த காலகட்டம் 2011-2016 ஆகும். அப்போது அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். தற்போது மின்சார வாரிய முன்னாள் தலைமை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் என பலர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சரும், தற்போதைய அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் ஆர்.விஸ்வநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications