சசிகலாவை சந்திக்க செல்லும் மாஜிக்கள்? அடுத்தடுத்து அதிமுகவில் பூசல்கள்.. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்?
சென்னை: நகர்ப்புற தேர்தல் முடிந்தாலும் முடிந்தது அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை கட்டி காப்பாற்றும் தலைவராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் என அனைவரும் நினைத்திருந்தனர். அது போல் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்ட போதெல்லாம் ஓ பன்னீர் செல்வத்தை தான் முதல்வராக்கிவிட்டு சென்றுள்ளார்.
எனவே ஓபிஎஸ்தான் முதன்மை தலைவர் என்பது அவரது ஆதரவாளர்களின் வாதமாக இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த போதே தொண்டர்கள் சோர்ந்து விட்டனர்.

நகர்ப்புற தேர்தல்
நகர்ப்புற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என அவர்களை சமாதானப்படுத்திய நிலையில் அந்த தேர்தலிலும் அதிமுக தோல்வியையே சந்தித்தது. கடந்த முறையாவது தேர்தல் தோல்விக்கு பாஜக மீது பழி போட வசதியாக இருந்தது. இந்த நகர்ப்புற தேர்தலில் பாஜக கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட்டும் தோல்வி அடைந்தது தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கவுன்சிலர்
அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். சீட்டு கிடைக்காத விரக்தியில் இருந்தவர்களும் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர். அடுத்த தேர்தலுக்குள் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்ற நிலைமை இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், மூத்த அதிமுக தலைவர்கள், அதிலும் வழக்குகளில் சிக்கியுள்ளவர்களை தேடி பிடித்து அவர்களை தட்டி தூக்க திமுக தலைமை தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொண்டவர் சசிகலா. எனவே இந்த முறையும் சசிகலா அதிமுகவுக்கு வந்தால் கட்சி பலப்படுத்தப்படும் என்பதை சில நிர்வாகிகள் நம்புகிறார்களாம். இதனால் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
கட்சியின் நிலை மிகவும் மோசமாவதற்குள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவை பலப்படுத்திவிட்டு தேர்தலை சந்திக்க வைக்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் நிகழ்ந்த தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய நிலையிலும் சசிகலாவை சந்திப்பதில் அவருக்கு தயக்கம் இருக்கிறதாம்.

சசிகலா கைகளுக்கு அதிமுக சென்றால்
சசிகலாவின் கைகளுக்கு அதிமுக சென்றுவிட்டால், அவரது கையே ஓங்கி இருக்கும். தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என்பதால் அதிமுகவின் முக்கிய தலைமை பதவியை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில் ஓபிஎஸ் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை அறிந்த மாஜிக்கள் கூட்டாக சேர்ந்து சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனராம். ஒரு பக்கம் அதிமுகவினருக்கு திமுக வலை வீசி வருகிறது. இன்னொரு பக்கம் மாஜிக்கள் சசிகலாவை சந்தித்து தலைமையேற்க அழைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில் கட்சியின் நலன் கருதி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர் செல்வம் என்ன செய்ய போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications