பாஜக டூ அதிமுக.. அடுத்தடுத்து யூடர்ன் போட்டு அப்படியே திமுக.. யார் இந்த மைத்ரேயன்?
சென்னை: இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் (ADMK Ex-MP Maitreyan Joins DMK) இணைந்தார். ஏற்கனவே பாஜக, அதிமுக, ஓபிஎஸ் அணி என மாறி மாறி கட்சி தாவியுள்ள மைத்ரேயன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கிய மைத்ரேயனுக்கு எம்.பி பதவி கிடைத்தது. 3 முறை மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பியும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமாக இருந்த மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த மைத்ரேயன், அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

யார் இந்த மைத்ரேயன்
மைத்ரேயனை பொறுத்தவரை பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையில் தொடங்கி அதிமுக, ஓபிஎஸ் அணி, பின்னர் மீண்டும் பாஜக, அதிமுக என பயணித்து தற்போது திமுகவில் இணைந்துள்ளார். மைத்ரேயன் யார் என்பது குறித்தும் அவரது அரசியல் பயணம் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
மருத்துவரான மைத்ரேயன் துவக்க நாட்களில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்த மைத்ரேயனுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு பாஜகவின் தமிழக பிரிவின் செயற்குழு உறுப்பினராக பதவி கிடைத்தது. இதையடுத்து, 1995 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தமிழக பொதுச் செயலாளராகவும் அதையடுத்து, 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பாஜக துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழக பாஜக தலைவர்
தொடர்ந்து மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இருந்த போது, அவருக்கு பாஜக தலைவர் பொறுப்பும் கிடைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் 2000 ஆயிரம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராகவும் இருந்தார். அதன்பிறகு திடீரென பாஜகவில் இருந்து விலகிய மைத்ரேயன், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கிய மைத்ரேயனுக்கு எம்.பி பதவி கிடைத்தது.
3 முறை மாநிலங்களவை எம்பி
மூன்று முறை மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உள்கட்சி குழப்பங்கள் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் அணியின் பக்கம் சென்ற மைத்ரேயன் பின்னர் எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டார். பின்னர், 2022 ஆம் ஆண்டு மைத்ரேயன், ஓபிஎஸ் அணியில் மறுபடியும் இணைந்தார். இதனால் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி கடந்த 2023 ஜூன் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு போதிய முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில், 2024-ல் இணைந்தார். பாஜக, அதிமுக என மாறி மாறி யூ டர்ன் அடித்த மைத்ரேயன் தற்போது திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.












Click it and Unblock the Notifications