எடப்பாடி கை காட்டுபவர்தான் பிரதமர்.. எவ்ளோ ஆசையா சொன்னார் உதயகுமார்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி கை காட்டுபவரே பிரதமர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பில்டப் செய்து வந்த நிலையில், தேர்தல் முடிவு அதிமுகவினரின் கனவுகளை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு இப்போதுதான் சற்று தணியத் தொடங்கியுள்ளது. பாஜக லோக்சபா தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. ஆனால் கடந்த 2 முறைகளை போல் தற்போது தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதன் காரணமாக நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்ற கூட்டணி கட்சி தலைவர்களை நம்பியே ஆட்சியமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் பாஜகவால் முன்பு போல நினைத்த மாதிரி செயல்பட முடியாது. பாஜக ஆட்சியின் குடுமி கூட்டணி கட்சிகளிடம் உள்ளதால் பாஜகவுக்கு இந்த முறை கொஞ்சம் நெருக்கடியான நிலையே இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க அதிமுக தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தலுக்கு சில மாதங்ககளுக்கு முன்பாக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக வெளியே வந்தது. பாஜக தலைமை எவ்வளவோ முயற்சித்தும் கூட்டணியில் சேர அதிமுக மறுத்துவிட்டது. தேர்தல் பிரசாரத்திலும் அதிமுக - பாஜக கடுமையாக மோதிக்கொண்டன.
தமிழக பாஜக தலைமையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக சாடி வந்தனர். ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற ரேஞ்ச்சுக்கு பில்டப் செய்தனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் தனித்தும் போட்டியிட்டது. இதில், திமுக கூட்டணி 39 இடங்களையும் அள்ளியது. 40/40 என அதிமுக மூத்த தலைவர்கள் கூறிய நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
திருவள்ளூர், தூத்துக்குடியில் டெபாசிட் போன நிலையில், முன்பு பலமாக இருந்த கோவை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தொகுதிகளில் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எடப்பாடி கை காட்டுபவர்தான் பிரதமர் என்று வார்த்தைக்கு வார்த்தை பிரசாரத்தில் அதிமுகவினர் முன்வைத்தனர். ஆனால் தேர்தல் ரிசல்ட் அதிமுகவின் இந்த கனவை சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டது.












Click it and Unblock the Notifications