அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. பொதுச்செயலாளராக முதல் டெல்லி பயணம்! இவங்களும் போனாங்களா?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருக்கிறார். இன்று டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தபோது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்து ஓராண்டை அடைய உள்ளது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி அதில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதன் காரணமாக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மறுபக்கம் அதிமுகவை கைப்பற்றும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு சட்டப்போராட்டங்களை தனது ஆதரவாளர்கள் துணையுடன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அண்மையில் அங்கீகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
அத்துடன் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை சில நாட்களுக்கு முன் ஏற்றது. இதனால் ஏறக்குறைய அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றுவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த ஓராண்டாக ஈபிஎஸ், ஓபிஏஸ் தரப்பினர் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் பல்வேறு தருணங்களில் தமிழ்நாடு வரும்போது அவர்களை சந்திக்க போட்டியிட்டது நாடறிந்த ஒன்று.
இந்த நிலையில் கடந்த மாதங்களாகவே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு விழவில்லை." என்று தெரிவித்தார்.
அத்துடன் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் இதனை நேரடியாகவே விமர்சித்தனர். இரு தரப்பிலிருந்தும் வார்த்தை போர் தொடர்ந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலையின் உருவ பொம்மையை அரியலூரில் அதிமுகவினர் எரித்தனர்.
இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தொண்டராக கட்சியில் தொடர்வேன்." என்று எச்சரித்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் அண்ணாமலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேட்டால் கருத்து சொல்லலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே அண்ணாமலை பேசி வருகிறார். அவரை பற்றி என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம்." என்று முதல் முறையாக நேரடியாக விமர்சித்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளராக முதல்முறை எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்ளார். இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பில் அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர். இதில் அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்தும், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications