கெடுப்பது "குரங்கு" குணம்! கொல்வது "முதலை" குணம்! ஓபிஎஸ்-டிடிவி தினகரன் மீட்டிங்! ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை: ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில காலமாக நடக்கும் மாற்றங்கள் மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
மேலும், எதிர்க்கட்சி தலைவராக அவர் இருந்த நிலையில், அந்த பதவியும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பக்கம் அணி வகுத்து நின்றனர்.

அதிமுக: இதனால் எடப்பாடி முதலில் இடைக்கால பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்த உடனேயே எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வந்த சில நொடிகளிலேயே எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
கட்சியில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் இப்போது எடப்பாடிக்கு ஆதரவாகவே உள்ளனர். இதனால் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் பெரும் அதிர்வுகள் உருவாகவில்லை. இப்படி ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதால் மிக விரைவில் ஓ பன்னீர்செல்வம் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. ஓபிஎஸும் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதே இதையே கூறி வந்தார்.
ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திங்கள்கிழமை மாலை டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு நடந்தது. இதற்காக அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு ஓபிஎஸ் நேரில் சென்றிருந்தார். அவருடன் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றிருந்தார். அவர்களை வீட்டு வாசலுக்கே சென்று டிடிவி தினகரன் வரவேற்றார். அவர்களுக்கு இடையேயான சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீண்டது.
அதன் பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதிமுகவைக் காக்க இனி இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தனர். மேலும், இதுவரை நடந்த அனைத்தையும் மறந்துவிட்டுச் செயல்பட உள்ளதாக அறிவித்தனர். இது மட்டுமின்றி சசிகலாவைச் சின்னம்மா என்று குறிப்பிட்ட ஓபிஎஸ், அவரையும் விரைவில் சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிடிவி தினகரனும் அப்போது எடப்பாடி தரப்பை நோக்கி சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவை பொது எதிரி என்று குறிப்பிட்ட அவர், எடப்பாடியைத் துரோகி என்றும் சாடினார்.

ஜெயக்குமார் அட்டாக்: இதற்கிடையே டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பழைய எம்ஜிஆர் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு ஜெயக்குமார் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது.. அன்றே கூறினார் புரட்சித்தலைவர்! உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்! காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்கு குணம்! ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலை குணம்! ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா!" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
