"இடைக்கால பொதுச்செயலாளர்.." எடப்பாடி போடும் அடுத்த பிளான்.. இன்றே களமிறங்கும் மாஜி அமைச்சர்! அடடே
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடப்பாடி அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு எடப்பாடி தரப்பிற்கு மகிழ்ச்சியைத் தந்துள்ள நிலையில், அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டனர். இதற்காக இன்று அவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் நாடுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் இருந்த வரை எடப்பாடி- ஓபிஎஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இயங்கி வந்தது. அப்போது பெரிதாக எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை.. ஆனால், ஆட்சி போனதும்.. காட்சிகள் மாற தொடங்கின.
எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராகவும் ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போதே இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது பூதாகரமாகவில்லை..

அதிமுக
இந்தச் சூழலில் கடந்தாண்டு திடீரென ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் இதைப் பொதுவெளியில் போட்டு உடைத்தார். இதையடுத்து அதிமுகவில் பெரியளவில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். அப்போது முதலில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக அவை தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

பொதுக்குழு
சில வார இடைவெளியில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக அதிமுக விதிகள் மாற்றப்பட்டு.. அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்வைச் செய்யவும் தேர்தல் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படும் தீர்மானமும் ஜூலை மாதம் நடந்த இந்தப் பொதுக்குழுவில் தான் நிறைவேற்றப்பட்டது.

வழக்கு
இருப்பினும், ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் தான் இருக்கும் நிலையில், தனது அனுமதியில்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது என்றும் இதனால் ஜூலையில் நடந்த பொதுக்குழுவே செல்லாது என்று சொல்லி வழக்குப் போட்டார் ஓபிஎஸ். இதில் உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வர உச்ச நீதிமன்றம் சென்றார். இடையில் அனைத்து விஷயங்களிலும் இரு தரப்பிற்கும் இடையே மோதலே இருந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குக் கூட எடப்பாடி தரப்பிற்குப் போட்டியாக ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்தார்.

தீர்ப்பு
அந்தளவுக்கு இரு தரப்பிற்கும் இடையே மோதலே இருந்தது. இருவரின் ஆதரவாளர்களும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்குவதாக எல்லாம் அறிவித்தனர். ஓபிஎஸ், எடப்பாடி என இருவருமே தங்களிடம் தான் உண்மையான அதிமுக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வந்தனர். அந்தளவுக்கு மோதல் உச்சமடைந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நேற்று வந்தது.

எடப்பாடி பழனிசாமி
சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அதேநேரம் எடப்பாடி தரப்பு இந்த தீர்ப்பால் செம ஹேப்பி.. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் நேற்று கொண்டாடித் தீர்த்தனர். நேற்று ஆர்பி உதயகுமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி உற்சாகத்துடனேயே இருந்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை
ஆனால், அவர்கள் அத்துடன் நிற்கவில்லை.. தீர்ப்பு வந்தவுடனேயே அடுத்தகட்ட வேலையை ஆரம்பித்துவிட்டனர். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் மனு அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவுள்ளனர். அதாவது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரியே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாடுகிறது. மாஜி அமைச்சரும் எம்பியுமான சிவி சண்முகமும் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மட்டும் அதிமுக மனுவை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸுக்கு அது பெரிய சிக்கலாக மாறிவிடும்.












Click it and Unblock the Notifications