பொதுச்செயலாளராக சட்டசபைக்கு வந்த இபிஎஸ்..அதிமுகவினரால் அதிர்ந்த மேஜை..திரும்பி பார்த்த எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பல தடைகளைத் தாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் இன்றைய தினம் பொதுச்செயலாளராக அடி எடுத்து வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மேஜையை தட்டி உற்சாகமான வரவேற்பினை அதிமுக எம்எல்ஏக்கள் அளித்தனர்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடங்கிய நாளில் இருந்தே பிரச்சினை உருவெடுத்தது. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் பெரும்பாலோனோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நின்றனர். ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி ஆவர்த்தனம் நடத்தினார்.
பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை மற்றும் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அனைவருக்கும் நன்றி
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். என்னை ஒருமனதாகத் தேர்வு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினர்.

சட்டசபையில் வரவேற்பு
பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் சட்டசபைக்கு இன்று வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டசபைக்குள் காலடி எடுத்த வைத்த உடனேயே மேஜையை தட்டி ஆரவாரத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். அப்போது சபையில் இருந்த பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தனர்.

கொறாடா உடன் சந்திப்பு
இதனிடையே இன்று காலையில் சபாநாயகர் அப்பாவு உடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின் போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்குமாறு எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கக்கூடாது என்று அதிமுக கொறடா சபாநாயரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications