சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராக்கெட் வேகத்தில் காய்கறி விலை.. முதலில் இதை செய்யுங்க முதல்வரே.. ஓ.பி.எஸ் முக்கிய கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: காய்கறி விலை ராக்கெட் வேகத்தில் செல்லும் நிலையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவானதால், காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது, இதைக் கட்டுப்படுதும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 09-11-2021 அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

ADMK OPS appealed to the TN government to take action to curb the rise in vegetable prices as they are skyrocketing

இதனையடுத்து, தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இதன்படி கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கூட்டுறவுத் துறை அமைச்சரால் 24-11-2021 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அறிவிப்பு வெளியிட்டு 10 நாட்கள் கூட முடியாத நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது வெளிச் சந்தையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் தற்போதைக்கு காய்கறி விற்கப்படாது என்றும், அதே சமயம் பண்ணை பசுமைக் கடைகளில் தொடர்ந்து குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அதாவது, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தம். இதற்குக் காரணம், சென்ற முறை வெங்காயம் நியாய விலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டபோது, விற்பனையாகாத வெங்காயத்திற்கான பணத்தை ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்ததாகவும், எனவே விற்பனையாகாத காய்கறிகளுக்குப் பணம் வசூலிக்கப்படாது என்று உறுதி அளித்தால் காய்கறி விற்பனை செய்ய ஒத்துழைப்பு அளிப்போம் என ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஊழியர்களுடன் கலந்து பேசி, ஒரு தீர்வினைக் கண்டு, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்தத் திட்டத்தையே கைவிடுவது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை.

24-11-2021 அன்றைய காய்கறிகளின் வெளிச் சந்தை விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனால், செய்திக்குறிப்பிலோ அரசின் நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

24-11-2021 அன்று வெளிச் சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு கிலோ தக்காளி தற்போது வெளிச் சந்தையில் 125 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் 150 ரூபாய்க்கும், 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 135 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 170 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சௌ சௌ 75 ரூபாய்க்கும், 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் 260 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோஸ் 80 ரூபாய்க்கும், 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சுரைக்காய் 105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒருசில காய்கறிகளைத் தவிர அனைத்துக் காய்கறிகளின் விலையும் 100 ரூபாய்க்கு மேல் வெளிச் சந்தையில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு விளம்பரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.

கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்குக் காய்கறிகளின் விலை உயரவில்லை. முதல்வர் ஸ்டாலின், காய்கறிகளின் விலை உயர்ந்துகொண்டே வருவதைப் பற்றி பேசாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் காய்கறிகளின் விலையையும் குறைந்தபட்சம் பாதியாகவாவது குறைக்கும் அளவுக்கு, அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

English summary
AIADMK co-ordinator O. Panneerselvam has appealed to the government to take action to curb the rise in vegetable prices as they are skyrocketing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X