ஸ்டாலின் Vs எடப்பாடி.. 3 அஸ்திரங்களுடன் களமிறங்கிய அதிமுக.. கிராமப்புற ஓட்டுக்கள் கைகொடுக்குமா?
உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னெடுத்த செயல்பாடுகள் மிகுந்த கவனத்தை பெற்றன
சென்னை: திமுகவுக்கு இணையாக, அல்லது திமுகவை மிஞ்சி செயல்பட வேண்டும் என்ற துடிப்புடன், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக களமிறங்கியது கவனத்தை பெற்றுள்ளது.
இந்த தேர்தல் திமுகவுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிமுகவுக்கு முக்கியமானதாகும் .. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு சதவீதத்தில் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று அதிமுக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் விட்டதை பிடிக்க வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வலிமை பொருந்தி உள்ள திமுக அரசை சமாளிக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இரட்டை தலைமை
என்னதான் சசிகலா பிரச்சனை, இரட்டை தலைமை மோதல் போன்றவை கட்சிக்குள் ஏற்பட்டு வந்தாலும், திமுகவிடம் பலம் குறைந்து போய்விடக்கூடாது என்பதற்காகவும், தொண்டர்களிடம் சரிவை சரிக்கட்டவும் உள்ளாட்சி தேர்தலை சரியாக அதிமுக பயன்படுத்த திட்டமிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது பெரும்பாலும் வடமாவட்டங்கள் என்பதால், கூட்டணியில் இருந்த பாமகவை அளவுக்கு அதிகமாக அதிமுக நம்பியது..

தனித்து போட்டி
ஆனால், பாமக தனித்து போட்டி என்று தெரிவித்து, அதிமுகவில் இருந்து நழுவி கொண்டது.. இது உண்மையிலேயே அதிமுகவுக்கு ஷாக்தான்.. கடந்த முறை வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அமலாக்கியது, அத்தனையும் ஓட்டுக்களாக மாறும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு போதுமான வாக்கு சதவீதத்தை பெற்று தரவில்லை..

பாமக
ஆக, நேரடியாக வடமாவட்டங்களை அதிமுகவால் எதிர்கொள்ள முடியாத சூழல் உருவானது.. மற்றொரு பக்கம் பாமகவும் கூட்டணியில் இல்லாத சூழல் ஏற்பட்டது. அப்படி இருந்தும், துணிந்து களமிறங்கினார் எடப்பாடி பழனிசாமி.. தன்னுடைய பிரச்சாரத்தை மட்டுமே முழு பலமாக இந்த தேர்தலில் பயன்படுத்த நினைத்தார்.. முதலாவதாக, திமுகவை டேமேஜ் செய்து கொண்டே, அதிமுகவுக்கு ஓட்டு கேட்பது என்ற ரூட்டை பிடித்தார்.. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்காமல் இருப்பது, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வராமல் இருப்பது போன்ற பிரச்சாரத்தை ஆயுதமாக வைத்து கொண்டார்.

டேமேஜ்
அத்துடன், நீட் தேர்வு தொடர்பான பொய்யான வாக்குறுதி, அதனால் ஏற்பட்ட 2 மரணங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நீட் விவகாரத்தையும் இணைத்து கொண்டார். அடுத்ததாக, அதிமுகவில் இருந்தவர்கள்தான் இன்று திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி, திமுகவுக்குள்ளேயே ஒரு ட்விஸ்ட்டை உருவாக்கினார். இதன்மூலம், அந்த அமைச்சர்கள் மீது திமுக மேலிடத்துக்கு எரிச்சல், அதிருப்தி ஏற்படலாம் என்று கணக்கு போட்டார்.

வாக்குகள்
மூன்றாவதாக, கிராமப்புறங்களை மையமாக வைத்து இந்த தேர்தல் நடப்பதால் இது அதிமுகவுக்கு சாதகமாகும் என்று யூகித்தார்.. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிராமப்புறங்களில் அதிகப்படியான வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது.. அதனால், இந்தமுறையும் பெரும்பாலான இடங்களில் வெல்ல முடியும் என்று அதிமுக மேலிடம் எதிர்பார்த்தது.

வேட்பாளர்கள்
இதற்கு நடுவில் திமுகவை போலவே, அதிமுகவின் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை தந்தனர்.. ஆனாலும், திமுக செய்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, போராட்டமும் நடத்தி அதன்மூலமும் ஸ்கோர் செய்ய பார்த்தது அதிமுக. இப்படி நாலாபக்கமும் வியூகங்களை தெறிக்கவிட்டு களமிறங்கிய அதிமுகவின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications