பிரபாகரனின் நம்பிக்கை.. விடுதலை புலிகளின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் காலமானார் - யார் இவர்?
சென்னை: தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், நாம் தமிழர் கட்சி தடா சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை அவர் காலமானார்.

தடா சந்திரசேகரனின் மறைவு தமிழ்தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருருகிறேன். என் மீது எப்போதும் அன்பை பொழிபவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக காவல்துறை என்னை கைது செய்த போது நீதிமன்றத்திற்கு வந்து ஆறுதலாக நின்றவர். கடவுச்சீட்டு முடக்கப்பட்ட போது வழக்குக்காக ஆஜரானவர். அண்ணன் தடா சந்திரசேகர் அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் ட்விட்டரில் தடா சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது, "எனது மூத்த வழக்கறிஞரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிய பெரும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளரான தடா சந்திரசேகர் இலங்கைக்கே சென்று ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டவர். தமிழ்நாட்டில் ஈழப்போர் குறித்தும், தமிழ் தேசிய விடுதலை குறித்தும் பேசி வந்தவர். பிரபாகரனே இவரை ஈழத்துக்கு அழைத்து நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து விடுதலை புலிகள் அமைப்புக்காக ஆஜராகி வழக்கறிஞராக வாதிட்டவர் தடா சந்திரசேகர். பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாளும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது சென்னை திருவான்மியூரில் உள்ள தடா.சந்திரசேகர் வீட்டில் தான் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications