ஆப்பிரிக்க பெண்.. தமிழ் பையன்.. யூடியூப்பை கலக்கும் காதல் தம்பதி! யார் இவர்கள்?
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம் என்பவரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பை என்பவரும் காதல் திருமணம் புரிந்துகொண்டு யூடியூப் சேனல் மூலம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழக்கூடிய தம்பதி ராம் மற்றும் பை. யூடியூப்பில் இந்த ஜோடி மிகப் பிரபலம். ராம் என்று சொன்ன உடன் அவர் இந்தியர் என்பது புரிந்திருக்கும். அவர் ஒரு பச்சை தமிழர். அவரது மனைவி பை ஒரு காங்கோ ஆப்பிரிக்க இனப் பெண். ராம் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு சவுத் இண்டியன் உணவகத்தில் வேலை செய்யும்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

"முன்புஎனக்கு 25 வயது இருக்கும்போது நான் ரெஸ்ட்டாரண்டில் செஃப் ஆக வேலை பார்த்தேன். ஆனால், இப்போது செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். நான் செஃப் ஆக இருக்கும்போது எனது உணவகத்திற்கு சவுத் இண்டியன் உணவை ருசிக்க 'பை' வருவார். அடிக்கடி வந்ததால் எங்களுக்குள் ஒரு பழக்கம் ஏற்பட்டது. ஆகவே, அவரிடம் போய் உணவு பற்றிய விமர்சனங்களைக் கேட்பேன். அப்படியே இருவரும் போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம். அதன் மூலம் ஒரு பழக்கம் வந்தது. அது காதலாக மாறியது. எங்களுக்குத் திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகின்றன" என்கிறார் ராம் என்கிற ராமச்சந்திரன்.
"நான் இவருடன் பழகும்போதே எங்கள் நாட்டுக் கலாச்சாரமும் தமிழ்நாட்டு கலாச்சாரமும் பொருந்திப் போவதை உணர்ந்தேன். அன்பான மக்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதேபோலத்தான் நாங்களும். அதனால் ராம் மீது காதல் வந்தது. முதலில் சவுத் இண்டியன் சாப்பாடு பிடித்துப் போனதால் அவரது உணவகத்திற்கு அடிக்கடி போனேன். பிறகு அவரையே பிடித்துப் போனது. இப்போது எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்" என்கிறார் பை.
"ஆப்பிரிக்கப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வீட்டில் சம்மதிப்பார்களா என்று எனக்குச் சந்தேகம். ஆகவே நான் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடம் வரை சொல்லவே இல்லை. எனக்கு மகன் பிறந்ததை கூடச் சொல்லவில்லை. மறைத்துவிட்டேன். பை ஒரு கிறிஸ்துவர். நான் பக்கா இந்து. என் பெயரை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். எங்கள் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறைப்படி ஒரு பூங்காவில் நடந்தது. பை குடும்பத்தினர் 20 ஆண்டுகள் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தரப்பில் திருமணத்திற்கு எந்தக் கட்டுப்பாடு இல்லை. பை பெற்றோர், மகளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் சரி என ஏற்றுக்கொண்டார்கள்"என்கிறார்.

இவரது குடும்பம் சில மாதங்கள் முன்பாக முதன்முறையாக அமெரிக்கா சென்றுள்ளது. இவரின் பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனாலும் திருமண நடந்ததைச் சொன்ன உடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிறகு இரண்டு ஆண்டுகள் முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர் இந்தத் தம்பதி. தஞ்சாவூர் பெரிய கோயில், குல தெய்வ வழிபாடு என்று ஊர் சுற்றிப் பார்த்துள்ளார் பை. ஆகவே தமிழ்நாட்டில் நல்ல வளமான வரலாற்றுக் கலாச்சாரம் உள்ளது என்கிறார்.
கொரோனா நேரத்தில்தான் இந்தத் தம்பதி யூடியூப் தளத்திற்குள் வந்துள்ளனர். ஜாலியாக வீடியோக்களைப் போட்டு லந்து செய்துள்ளனர். இறுதியில் சேனல் நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. மில்லியன் கணக்கில் வீயூஸ் போக ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கப் பெண் பை தமிழ்க் கலாச்சாரம் படி புடவை கட்டி பொங்கல் கொண்டாடியது எல்லாம் வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது.

"தமிழ்நாட்டு உள்ளாகவே ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் லவ் பண்ணாலே இப்போதும் பிரச்சினை வருகிறது. ஆனால், நாங்கள் ஒரு blindian couple. அப்படி என்றால் கறுப்பினத்தைச் சேர்ந்தவரும் இந்தியரும் சேர்ந்த தம்பதி என்று பொருள். இனம், மதம், மொழியைத் தாண்டி நாங்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்தத்தான் யூடியூப் தொடங்கினோம். அது இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது" என்கிறார் ராம்.












Click it and Unblock the Notifications