Swine Flu: சென்னை கிண்டி தேசிய பூங்காவில் பரவும் பன்றிக் காய்ச்சல்! இது மனிதர்களுக்கு பரவுமா?
சென்னை: சென்னை கிண்டி தேசிய பூங்காவிற்குள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து அனைத்து பன்றிகளையும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பன்றிகள் பிடிக்கப்பட்டவை வரை கருணைக் கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை கிண்டி தேசிய பூங்கா, இந்தியாவில் எட்டாவது சிறிய பூங்காவாகும். இது 172 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 14 வகையான பாலூட்டிகள் உள்ளன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி உள்ளிட்டவையும் உள்ளன. அது போல் 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இங்கு உண்டு. அது போல் முள்ளம்பன்றிகள், பாம்புகளும் உள்ளன.

இந்த நிலையில் இங்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து விலங்குகளை பார்வையிடுகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் பூங்காவிற்குள் தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த பன்றிகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து அதில் உள்ள சில மாதிரிகளை போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து வைத்தனர்.
பரிசோதனையின் முடிவில் வீட்டு மற்றும் காட்டுப் பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தெருவில் திரியும் 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை பூங்கா வளாகத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் தொடங்கினர்.
இந்த நடவடிக்கையில் 8 பன்றிகளை கருணைக் கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது போல் பன்றிகளை பிடிக்க அதற்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து கூண்டு அமைத்து பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
பிடிபட்ட பன்றிகள் நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணைக் கொலை செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல், பன்றிகளுக்கு ஆபத்தானது என்றாலும் பூங்காவிற்குள் மற்ற வனவிலங்குகளுக்கு இது பரவாது. அது போல் மனிதர்களுக்கும் பரவாது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.















Click it and Unblock the Notifications