அதே டெய்லர்.. அதே வாடகை! தமிழ்நாட்டு அரசியலால் கல்லா கட்டும் ஆப்பிரிக்க பழங்குடிகள்! 35 டாலர் தானாம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை ஆப்பிரிக்க பழங்குடிகள் பாராட்டியதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 'அதே டெய்லர் அதே வாடகை' கதையாக நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை வாழ்த்தி ஆப்பிரிக்க பழங்குடிகள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இளைய தளபதியாக அறிமுகமாகி தளபதியாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதற்கு பிறகு பல வெற்றி படங்களை கொடுத்து தற்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.
குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மிகப் பெரியது. இந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை விஜய் கொண்டாடுகிறார். ஒரு நடிகராக விஜயின் கடைசி பிறந்தநாள் இதுதான் என கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.

காரணம் தற்போது ஜனநாயகன் படத்தை நடித்து முடித்து இருக்கும் அவர் அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை, இனி முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறேன் என அறிவித்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அப்படி பார்க்கும் போது ஒரு நடிகனாக விஜய்க்கு இது கடைசி பிறந்தநாள் என்றாலும், முழு நேர அரசியல்வாதியாக முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் எங்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என டிசைன் டிசைனாய் வீடியோ போட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஆப்பிரிக்க பழங்குடிகள் வாழ்த்து தெரிவிப்பது பேசுபொருள் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை வாழ்த்தி ஆப்பிரிக்க பழங்குடிகள் வாழ்த்து வீடியோ வெளியிட்டது. அது சில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
இந்த நிலையில் அது ஒரு வாழ்த்து வெப்சைட்டை சேர்ந்த நிறுவனத்தின் ஏற்பாடு எனவும், 35 டாலர் செலுத்தினால் அவர்கள் இதே போல வீடியோ தருவார்கள் என விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் புகைப்படத்துடன் வீடியோ ஒன்று வெளியானது. இதேபோல பிரபல விமர்சகர் ஜான் ரவியின் வீடியோவும் வெளியானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவரை வாழ்த்தி தான்சானியாவை சேர்ந்த ஆப்பிரிக்க பழங்குடிகள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
டான்சானியா மசாய் பழங்குடியினர் தவெக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர் 🔥#HBDThalapathyVijay pic.twitter.com/e6BBiuvJDe
— Prasanna OG (@OGprasanna) June 21, 2025
இதன் மூலம் திமுக மீது வைக்கப்பட்ட விமர்சனம் உண்மையாகி இருக்கிறது என்கின்றனர் நாதகவினர். அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அந்த பழங்குடிகளை தொடர்பு கொண்டு தங்கள் பெயருடன் வீடியோ போட வேண்டும் என கட்டணம் செலுத்தி வருகிறார்களாம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் அவர்களை தொடர்பு கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விசாரித்த போது, திமுக அதுபோன்ற வீடியோவை முதலில் பரப்பியது. விசாரித்த போது தான் அது பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் வாழ்த்துவார்கள் என்ற தகவல் கிடைத்தது. இதயடுத்து ஜான் ரவி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் அந்த பழங்குடிகளை தொடர்பு கொண்டு வீடியோ வாங்கினர். இதை எடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு இருக்கிறோம். இதுவரை 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பதாகவும் விரைவில் உங்களுக்கான வீடியோவை அனுப்புவோம் என அந்த பழங்குடிகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாட்டாளர் சொல்லியிருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications