'226 நாட்கள்..' 1000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. தமிழ்நாடு மட்டும் சாதித்தது எப்படி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர் முதல் முறையாக நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஆண்டு கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதேபோல தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது.
இதையடுத்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறையக் குறைய ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

1000க்கு கீழ்
முதலில் பண்டிகை காலம் என்பதால் கூடுதல் தளர்வுகளால் எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், அப்படி நடக்காமல் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கொரோனா 2ஆம் அலைக்குப் பிறகு நேற்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 990 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

226 நாட்களுக்குப் பின்
தமிழ்நாட்டில் 226 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் பதிவாகிறது. கடைசியாக மார்ச் 18ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 985ஆகப் பதிவானது. அதன் பிறகு 2ஆம் அலை பாதிப்பு ஏற்படவே கொரோனா கேஸ்கள் மளமளவென அதிகரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாகக் கடந்த மே 21ஆம் தேதி 36,178 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மெல்லக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது 1000க்கு கீழ் குறைந்துள்ளது.

பாசிட்டிவ் விகிதமும்
மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவ் விகிதம் தற்போது 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 1.7%ஆகவும் சேலத்தில் 1.4%,ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. புதிய கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11,492ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், நேற்று 11,309ஆகக் குறைந்துள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை
இந்தியாவின் சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் கூட கட்டுக்குள் வராத நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்குச் சரியான நேரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த பல முக்கிய நடவடிக்கைகளே காரணம். முதலில் வைரஸ் பாதிப்பு அதிகரித்த போது, வல்லுநர்களின் ஆலோசனைப்படி மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முதலில் ஊரடங்கு
வைரஸ் பாதிப்பு குறையக் குறையவே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதிலும் கூட வைரஸ் சீக்கிரம் கட்டுக்குள் வராத மேற்கு மாவட்டங்களில் சற்று காலம் தாழ்த்தியே தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் வைரஸ் பாதிப்பு வேகமாக பரவாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அடுத்து தடுப்பூசி!
அடுத்து தடுப்பூசி! தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. முதலில் வேக்சின் குறித்த தயக்கம் பொதுமக்களிடம் இருந்தாலும் கூட, 2ஆம் அலைக்குப் பின் தயக்கமின்றி மக்கள் வேக்சினை போட்டுக்கொள்ளத் தொடங்கினர். தமிழ்நாடு சுகாதாரத் துறையும் வேக்சின் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்தது. இதன் மூலம் குறைந்த காலத்தில் அதிக பேருக்கு வேக்சின் போட முடிந்தது. மேலும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஏதுவாக மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு
அடுத்து முக்கியமாக கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய விழிப்புணர்வு பரப்புரையும் செய்யப்பட்டன. தமிழ்நாடு முதல்வர் தொடங்கி, அனைத்து அமைச்சர்களும் பொது இடங்களில் மாஸ்க்குகள் அணிந்தே இருந்தனர். அதேபோல இது தொடர்பான விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

கட்டுக்குள் கொரோனா
இப்படி தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நல்ல செய்தி தான் என்றாலும் கூட கொரோனா இன்னும் நம்மிடம் இருந்து முழுமையாக விலகவில்லை. அனைவருக்கும் வேக்சின் செலுத்தி முடிக்கும் வரை பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications