தைலாபுரம் தோட்டத்துக்கு படையெடுத்த ராமதாஸ் குடும்பத்தினர்.. அன்புமணி நீக்கத்தால் சலசலப்பு!
சென்னை: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள்.
பாமக மாநில நிர்வாகிகள் திலகபாமா, அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களை ராமதாஸ் இன்னும் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது பேரன் முகுந்தனை பாமகவின் நிறுவனர் ராமதாஸ், நியமித்ததையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால், அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவிலேயே இருவருக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாமகவினர் தம்மை சந்தித்து ஆலோசனை நடத்த பனையூரில் தனி அலுவலகமும் திறந்தார் அன்புமணி ராமதாஸ். மோதல் முற்றிவிட்டதா என்று எண்ணுகிற வேலையில், தந்தை டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனால் அப்பாவும் மகனும் சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளரை சந்தித்துப் பேசிய நிறுவனர் ராமதாஸ், "அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது." என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் ராமதாஸ் மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள். பாமக மாநில நிர்வாகிகள் திலகபாமா, அன்பழகன், வழக்கறிஞர் பாலு, எம்.எல்.ஏ சிவக்குமார் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களை ராமதாஸ் இன்னும் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications