ஒரே நாளில் 2 சம்பவங்கள்.. சட்டசபையில் விவாதமான சட்டம் ஒழுங்கு.. துப்பாக்கியை கையில் எடுத்த போலீஸ்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடங்கி தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் குற்றங்கள், கொலை சம்பவங்கள் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. அதிலும் அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை, மயிலாடுதுறையில் சாராய வியாபாரத்தை எதிர்த்த இளைஞர்கள் 2 பேர் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு, பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் கைது என்று வெளியான செய்திகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எதிர்க்கட்சிகளால் கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில் நெல்லையில் நேற்று ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது என்று வீடியோ வெளியிட்ட பின்னரும், கொலை செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக சட்டசபையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், இந்த ஆட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஜாகீர் உசேனை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் ஆத்திரத்தில் நடக்கும் கொலைகளை கடந்து, திட்டமிட்டே படுகொலைகள் அரங்கேறி வருவதே பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்ட கொலை நடந்து வருகின்றன. குற்றவாளிகள் என்று அறியப்படும் நபர்களை பின் தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்திருந்தாலே பாதி சிக்கல்களை தடுத்திருக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
குற்ற செயல்கள் நடைபெற்ற பின் நடவடிக்கை எடுப்பதை விடவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் பாதுக்காப்பதும் காவல்துறையின் பொறுப்பாகும். ஆனால் ஒவ்வொரு முறையும் குற்றச் சம்பவங்கள் நடந்த பின்னரே, போலீசார் நடவடிக்கை எடுத்து வருவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த சில மணி நேரங்களிலேயே தமிழ்நாட்டின் 2 இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கின்றனர்.
அதில் ஈரோடு அருகே சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரெட்டியார்பட்டி அருகே பதுங்கி இருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
அவரை சுற்றி வளைத்த போது, அரிவாளால் ஒரு போலீசாரை தாக்கி இருக்கிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளின் குரல்களை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகும் வகையில் சம்பவங்கள் நடந்திருப்பதால், விமர்சனங்களை கட்டுப்படுத்தவே போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை செய்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications