தமிழகத்தில் இன்று முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு.. மாணவர்கள் உற்சாகம்.. வழிகாட்டுதல்கள் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரை முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2ஆம் அலையும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 1) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.
அதேபோல பள்ளி, கல்லூரிகள் முழுமையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன .

வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கைகழுவத் தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் ஓராண்டிற்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகவும் பெரும் ஊக்கமளிக்கும் என மனநல வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications