நல்லகண்ணு மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏன்? “எடப்பாடி பழனிசாமி உண்மைய பேசணும்”.. பாயும் சிபிஐ
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தாதது சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், "எடப்பாடி பழனிசாமி உண்மை பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்." என சிபிஐ மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு (101) கடந்த 25 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் செவ்வணக்கம் கூறி நல்லகண்ணுவுக்கு விடைகொடுத்தார்.

ஆனால், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நல்லகண்ணுவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் சென்னையில் இருந்தபோதும் அவர் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் அஞ்சலி செலுத்தினார். முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தாததால் அதிமுக நிர்வாகிகளே அதிருப்தி அடைந்தனர்.
அதிமுக வட்டாரத்தில் இது தொடர்பாக பேச்சுகள் எழுந்தபோது, 2020-ல் எனது தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் வரவில்லை. இப்போது நான் ஏன் போக வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிவித்தனர். அன்று பிரசார கூட்டத்துக்கு செல்ல வேண்டியிருந்ததால் எடப்பாடி பழனிசாமியால் நேரில் செல்ல முடியவில்லை என்ற ஒரு பேச்சும் உள்ளது.
நல்லகண்ணு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் "தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" என்று புகழ்ந்தார். மேலும், "அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான இரா. நல்லக்கண்ணு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்." எனக் கூறி இருந்தார். ஆனால் நேரில் செல்லாதது அரசியல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு கடந்த 25ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தத் தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதற்கு எதிர்கட்சித் தலைவர் "எனது தாயார் 2020-ல் காலமானபோது கம்யூனிஸ்ட்டு கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்" எனச் சொல்லியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் உண்மை பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானபோது, அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவிக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, பொருளாளர் எம்.ஆறுமுகம் (முன்னாள் எம்எல்ஏ) இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேச வேண்டும்?
துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் பி.தங்கமணி, எம். ஆறுமுகம், நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்தபோது "ஆறுமுகத்தை எனக்கு நல்லாத் தெரியும்" எனக் கூறியது மறந்துபோனதா?
இந்த நிகழ்வின்போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த, கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை இருவரும் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.
எது எப்படியோ, அஇஅதிமுக நிறுவப்பட்ட காலத்தில் எம்ஜிஆர்-க்கு பக்கபலமாக இருந்து உதவிய, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியும், அதன் தலைவர்கள் எம். கல்யாண சுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் போன்ற தலைவர்களுடன் இணைந்து நின்றவர் இரா.நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உண்மை பேசுங்கள். எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மயிலம், மேட்டூர் தொகுதியை கேட்கும் அதிமுக.. சேலம், தர்மபுரியில் செக் வைத்த அன்புமணி.. என்ன நடந்தது? -
மீண்டும் கொங்கு பகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்பி.. தரமான சான்ஸை தவறவிட்ட எடப்பாடி! -
அதிமுகவுக்கு முன் தொகுதி பங்கீட்டை முடித்த திமுக.. அடித்து ஆடும் ஸ்டாலின்.. அமைதி காக்கும் எடப்பாடி! -
பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு!












Click it and Unblock the Notifications