என்ன நடந்தது தெரியுமா? வீடியோ எடுக்காதீங்க! கார் விபத்தில் சிக்கி சீறிய டிடிஎப் வாசன்! பரபர காட்சி
சென்னை: பைக் யூடியூபராக உள்ள டிடிஎப் வாசன் இன்று சென்னையில் காரில் சென்றார். அப்போது அவரது கார் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் ஸ்பாட்டில் என்ன நடந்தது? என்பது தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்கில் இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் சமீபகாலமாக டிடிஎப் வாசன் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பைக்கில் வேகமாக சென்றது, பொதுமக்களுக்கு இடையூறாக பைக்கில் சாகசம் செய்தது, விதிகளை மீறி பயணித்தது உள்பட பல புகார்கள் அவர் மீது எழுந்தது.
இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே தான் பைக் ரைடராக இருந்த டிடிஎப் வாசன் சினிமாவிலும் கால்பதிக்க உள்ளார். மஞ்சள் வீரன் என்ற திரைப்படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இதற்கான அறிவிப்பு, போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் தான் சென்னையில் இன்று டிடிஎப் வாசன் கார் விபத்தில் சிக்கினார். சென்னை அமைந்தகரை அருகே நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து அண்ணாநகர் செல்லும் பாதையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. அப்போது டிடிஎப் வாசன் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியது. இதில் பைக் மற்றும் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயங்கள் இன்றி தப்பினார். டிடிஎப் வாசனுடன் அவரது முதல் படத்தின் இயக்குனர் செல்லம் சென்றதாக கூறப்படுகிறது. அவரும் காயமின்றி தப்பித்துள்ளார். இதற்கிடையே கார் விபத்து நடந்தவுடன் அங்கு மக்கள் கூடினார்கள்.
இதையடுத்து டிடிஎப் வாசன் அங்கிருந்து ஆட்டோ ஏறி புறப்பட்டு செல்ல முயன்றார். இதற்கிடையே தான் அங்கிருந்த ஒருவர் டிடிஎப் வாசனை செல்போனில் வீடியோவாக எடுத்தார். இதை பார்த்த அவர் கோபமடைந்தார். மேலும் வீடியோ எடுக்கும் நபரை நோக்கி சென்ற டிடிஎப் வாசன், ‛‛ஏன் அண்ணா, என்ன நடந்ததுனே தெரியாமலே நீங்க பாட்டுக்கு வீடியோ எடுக்குறீங்க. சொல்லுங்க.. நான் கேட்கிறேன். என்ன நடந்தது சொல்லுங்க பார்ப்போம்' என சீறினார். மேலும் பக்கத்தில் நிற்பவரிடம், ‛‛என்ன நடந்ததுன்னு தெரியாமல் வீடியோ எடுத்துட்டு இருக்கிறாரே?'' என வினவினார்.
இந்த வேளையில் வீடியோ எடுத்த நபர், ‛‛வீடியோ எடுத்தது தப்பா?'' என கேள்வி கேட்டார். அதற்கு டிடிஎப் வாசன், ‛‛வீடியோ எடுத்தது தப்பு இல்லை அண்ணா.. ஆனால் எங்கள் வாழ்க்கை தானே போகும். எடுத்தத கொஞ்சம் கொடுக்கிறீங்களா? எனக்காக அண்ணா ப்ளீஸ்'' என கெஞ்சினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இதற்கிடையே தான் விபத்து குறித்து இன்னும் போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினம் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications