நெக்ஸ்டு என்ன? செந்தில் பாலாஜி கைதை அடுத்து ஸ்டாலினுடன் அமைச்சர்கள் ஆலோசனை - யாரெல்லாம் இருக்காங்க?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
சென்னை, கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கரூரில் உள்ள அவரது இல்லத்தில் 15 மணி நேரத்தில் சோதனை நிறைவடைந்தது.
சென்னை அடையாறில் உள்ள செந்தில் பாலாஜி இல்லத்தில் 17 மணி நேரம் தொடர்ந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது. தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையையும் முடித்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து காரிலேயே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அவரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வேலு, ரகுபதி, சேகர் பாபு உள்ளிட்டோர் நள்ளிரவே சந்திக்க சென்றனர். செந்தில் பாலாஜி கைதை அடுத்து இன்று அதிகாலை அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கலந்துகொண்டனர். அதில் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று காலை செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். மருத்துவமனையிலேயே வழக்கு விசாரணையும் நடந்தது. அமலாக்கத்துறை தரப்பு மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை கேட்ட நீதிபதி ஜூன் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரும் திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோவன், இடைக்கால ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பு வாதங்களை கேட்டு நாளை தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பாக அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications