ஒரு பக்கம் சரவெடி விமர்சனம்.. மறுபக்கம் "நைஸாக தூது.." ஓபிஎஸ் போடும் பிளானை பாருங்க!
சென்னை: ஆதரவாளர்கள் மூலம் அதிரடியான விமர்சனங்கள், செய்தியாளர்கள் மூலம் மறைமுக தூது என ஓ.பன்னீர் செல்வம் புதுவித யுக்தியை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கையில் எடுத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கொண்டாட்டம்
அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவாளர்கள் விமர்சனம்
இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், எதேச்சதிகாரமாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கும், அதிமுகவுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமியை இருவரின் ஆத்மாவும் மன்னிக்காது என்று தெரிவித்தார்.
அதேபோல் மற்றொரு ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியால் இந்தக் கட்சி நடத்த முடியாது என்பது இந்தத் தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. ஆகவே, தர்மம் வென்றிருக்கிறது. அதர்மம் அழிந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் மோசமான அரசியல் கனவுகள் இனி பலிக்காது என்று கடுமையாக விமர்சித்தார். இதேபோல் கோவை செல்வராஜும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசி இருந்தார்.
ஆனால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திய ஓபிஎஸ், ஆதரவாளர்களின் கருத்துக்கு மாறாக எடப்பாடி பழனிசாமிக்கு, சமாதான தூதை மறைமுகமாக அனுப்பியுள்ளார். அவர் பேசுகையில், அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஒற்றுமைக்கு தூது
இங்கே அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்று இல்லை. இது அதிமுக. அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஓபிஎஸ் மறைமுகமாக ஒப்புதல் அளித்ததாகவே பார்க்கப்படுகிறது.
அவரது ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், ஓபிஎஸ் வழக்கம்போல் அடக்கி வாசித்து வருகிறார். இதனால் பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு முன், அவர் பேசி வந்த அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று முடிவை கையில் எடுத்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

என முடிவு எடுப்பார் இபிஎஸ்?
அவர்கள் முன் பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான பொதுக்குழு நிர்வாகிகளின் பலமும், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இப்போது மூன்றாவது வாய்ப்பாக ஓபிஎஸ் மீண்டும் இணைந்து செயல்பட தூது அனுப்பியுள்ளதும், இன்னொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டெல்லி மேலிடத்தின் பார்வையும் ஓபிஎஸ் பக்கமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இவையனைத்தையும் சிந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications