ரிவர்ஸ் கியர் போட்ட செல்லூர் ராஜு.. ராகுல் காந்தியை புகழ்ந்து வெளியிட்ட பதிவு நீக்கம்! மேலிட பிரஷரா?
சென்னை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை நீக்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , மனதில் பட்டதை பட்டென்று பேசக்கூடியவர். செய்தியாளர் சந்திப்பின்போது செல்லூர் ராஜு அடிக்கும் கமெண்ட்கள் பிரசித்தம். தனது பேச்சால் பல முறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் செல்லூர் ராஜூ. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது போக்கில் செயலாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் செல்லூர் ராஜூ, நேற்று திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியை பாராட்டி பதிவிட்டார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் செல்லூ ராஜூ, ராகுல் காந்தி ஒரு ஹோட்டலில் அமர்ந்து மக்களுடன் சாப்பிட்டபடி அவர்களுக்கு எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சி, திமுக உடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்தன.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடம்பெற்றுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்துக் களம் கண்டுள்ளது. 7 கட்ட தேர்தலில் இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே மீதம் உள்ள இந்தச் சூழலில் ராகுல் காந்தியை செல்லூர் ராஜு புகழ்ந்து வீடியோ வெளியிட்டது அரசியல் களத்தில் விவாதமாக மாறியது.
மேலும், செல்லூர் ராஜு அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறார், காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணையப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, "ராகுல் காந்தியை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் ரீதியாக அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார். எனவே, அதை எங்களால் ஏற்க முடியாது. தேர்தல் காலத்தில் இப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை. செல்லூர் ராஜு நல்ல மனம் கொண்டவர். அவர் எல்லோரையும் பாராட்டுவார்" என்று தெரிவித்தார்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சியினர், செல்லூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்து வந்தனர். விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளரான மாணிக்கம் தாகூர் எம்.பி, தனது எக்ஸ் தளத்தில், "அண்ணனுக்கு நன்றி" என்று செல்லூர் ராஜுவின் பதிவைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களும் செல்லூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட தனது எக்ஸ் தள பதிவை நீக்கி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. ராகுல் காந்தியை புகழ்ந்த தனது பதிவால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தனது பதிவை நீக்கி இருக்கிறார் செல்லூர் ராஜு. அதிமுக தலைமையின் அழுத்தம் காரணமாக செல்லூர் ராஜூ பதிவை நீக்கியுள்ளாரா என இப்போதும் விவாதம் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications