ஒன்று கூடிய அதிமுக சீனியர்ஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒலிக்கும் கலகக்குரல்.. பஞ்சாயத்து ஆரம்பம்!
சென்னை: அதிமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கலகக்குரல் எழுப்பி வருகின்றனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் அவர்களின் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போட்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக திமுக உடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தவெக உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதேபோல் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் தவெக பக்கம் செல்லும் என்று கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பின், அந்தக் கட்சி அடையும் 11வது தோல்வி இதுவாகும். அதிமுக கூட்டணியாகவே 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதில் பாமக 4, அமமுக மற்றும் பாஜக தலா 1ல் வென்றுள்ளன. இதனால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. புதிய வாக்காளர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியாததே இந்த தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனிடையே தவெகவுக்கு ஆதரவு அளிக்க அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது மீண்டும் எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த ஆலோசனையில் திருத்தணி எம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன், விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது வெறும் தவெக ஆதரவு நிலைப்பாடு மட்டுமல்லாமல், அதிமுக தலைமைக்கு எதிரான கலகக்குரலாகவே அமைந்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். இதற்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தலைமையில் மாற்றம் வருமா அல்லது தவெக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications