எடப்பாடி பிரச்சார திட்டத்தில் மாற்றம்.. நீதிமன்ற உத்தரவால் அனுமதி மறுப்பால் பரப்புரை ஒத்திவைப்பு
சென்னை: கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற கிளை உத்தரவு எதிரொலியாக எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு அனுமதி வழங்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாமக்கல்லில் திட்டமிட்டிருந்த பிரச்சாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது
நாமக்கல் சுற்றுப்பயணம் அக்டோபர் 5, 6 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பயணம் அக்டோபர் 8 ஆம் தேதியில் நடைபெறும் என அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 9 ஆம் தேதி நாமக்கல். பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10 ஆம் தேதி அன்று ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி. ஈரோடு கிழக்கு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதேபோல், திங்கட்கிழமை மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்- பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வந்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி மறுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. இதனால், அதிமுகவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications