எடப்பாடிக்கு எகிறும் டென்ஷன்! தேமுதிக தொடர் பிடிவாதம்? கெத்து காட்டும் பாமக! பரபரக்கும் களம்
சென்னை: அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அக்கட்சி கேட்கும் ராஜ்யசபா சீட்டை கொடுக்க இயலாது என்பதிலும் அதிமுக உறுதியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் எல்லாம் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

அப்போது அக்கட்சிக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெல்லவில்லை என்றாலும் அக்கட்சி 4 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தையாவது தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் அக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகி, டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. 60 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
கள்ளக்குறிச்சி பிரேமலதா: கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட பிரேமலதாவும் வெல்லவில்லை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அதிமுகவுடன் பாமகவும் தேமுதிகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தேமுதிகவின் செயற்குழு கூட்டத்தில் 14 மக்களவை தொகுதி+ 1 ராஜ்யசபா தொகுதியை யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். இது தொண்டர்களின் முடிவு என்றும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை தெரிவித்திருந்தார். இது கட்சியினரின் நிலைப்பாடுதான், தலைமை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
7 தொகுதிகளுக்கு ஓகே: இதையடுத்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த போது 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டன. ஆனால் அதிமுக+ தேமுதிக கூட்டணி அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பிரேமலதா 7 மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் கேட்கிறாராம். அது போல் பாமகவும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்பதாக சொல்லப்படுகிறது.
இவர்களில் யாருக்கு மாநிலங்களவை தொகுதியை கொடுப்பது என்ற ஆலோசனையின் போது தேமுதிகவிடம் அதிமுக நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலத்தை வைத்துதான் ராஜ்யசபா என்பது உங்களுக்கே தெரியும். அப்படிப்பார்த்தால் எங்களுக்கு சட்டசபையில் 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். 34 எம்எல்ஏக்களுக்கு ஒரு ராஜ்யசபா வீதம் ஒரு சீட்டுதான் எங்களுக்கு கிடைக்கும். அதனால் உங்களுக்கு கொடுக்க இயலாது, வேண்டுமானால் கூடுதலாக ஒரு மக்களவை சீட் தர தயார் என்கிறார்களாம்.
3 தொகுதிக்கு டிக்: அது போல் தேமுதிக கேட்ட 7 விருப்பத் தொகுதிகளில் 3 தொகுதிகளை தர ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மதுரை தொகுதியை தேமுதிகவுக்கு தர முடியாது என்பதிலும் அதிமுக கறார் காட்டுகிறதாம். சரி பாமகவுக்காவது ராஜ்யசபா சீட்டு கிடைக்குமா என்றால், அக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களையும் சேர்த்தால் கூட 68 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் இரு ராஜ்யசபா எம்பி சீட்டு கிடைக்கும். ஆனால் 62+5= 67தான் உள்ளோம். இதில் எப்படி கொடுக்க முடியும் என இழுபறி நிலவுகிறது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேமுதிக கூட்டணியை இழந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே இந்த முறை அதே தவறை அதிமுக செய்யாமல் இருவரில் ஒருவரையாவது கூட்டணிக்குள் இழுத்தால்தான் ஓரளவுக்கு வெல்ல முடியும். எனவே தேமுதிகவை காட்டிலும் பாமகவுக்கு 5 எம்எல்ஏக்கள் இருப்பதால் ராஜ்யசபா சீட்டை கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மதுரை போச்சா: தற்போது கேட்ட மதுரையும் கிடைக்காமல் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைக்காமல் இருக்கும் தேமுதிகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார்கள். பாஜகவுடன் தேமுதிக கூட்டணி செல்ல ஏற்கெனவே மறுத்த நிலையில் இந்த ஒரு மாநிலங்களவை சீட்டுக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.












Click it and Unblock the Notifications