எடப்பாடி போட்ட 4 கண்டிசன்.. போனை போட்ட அமித் ஷா! டெல்லிக்கு கிளம்பிய அண்ணாமலை! குஷியில் பாஜக தலைகள்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி நான்கு நிபந்தனைகள் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. எடப்பாடி விதித்த நிபந்தனைகள் தொடர்பாக அவரிடம் அமித் ஷா பேசலாம் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்ததால், அவர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், ஏற்கனவே தலைவர் கனவில் இருக்கும் பாஜக தலைவர்கள் சிலர் குஷியில் இருக்கின்றனர்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்வதை கேட்டு இருப்போம். அந்த வகையில் தமிழகத்தில் திடீர் திடீரென கூட்டணி கணக்குகள் மாறுவது சகஜம் தான். இதற்கு முன்னர் பல கூட்டணி மாறுதல்களை தமிழக அரசியல் களம் சந்தித்திருக்கிறது.

அந்த வகையில் பாஜகவோடு இணை கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த அதிமுக மீண்டும் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி: நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். கட்சி அலுவலகத்தை பார்க்கத் தான் சொல்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் திடீரென இரவு நேரத்தில் அமித் ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
அமித் ஷா: சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் 2026 இல் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுக கூட்டணி வேண்டும் எனக் கூறி வந்த நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரும் அதனையே வலியுறுத்தி வந்தனர். அண்ணாமலையோ பாஜக தனித்து போட்டியிட வேண்டும் அல்லது பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்.
அண்ணாமலை: மேலும் அவரது பேச்சு அதிமுக தலைவர்களை கோபமடைய செய்த நிலையில் அப்போதே அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பாஜக தலைமை அதனை செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணிக்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி: அதே நேரத்தில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவரிடம் நான்கு முக்கிய நிபந்தனைகளை வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும், தொகுதி ஒதுக்கீடு முடிவுகளை அதிமுக தான் எடுக்கும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி, சசிகலா கூட்டணியில் இடம் பெறக் கூடாது, எல்லாவற்றையும் விட தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என அமித்ஷாவிடம் நேரடியாகவே கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை டெல்லி பயணம்: இந்த நிலையில் திடீரென இன்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அவரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் நிபந்தனைகள் அடிப்படையிலேயே அமித் ஷா அண்ணாமலையை சந்திக்க வருமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கோரிக்கையே அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது தான். எனவே கூட்டணிக்காக அதிமுக பேச்சைக் கேட்டு அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதனால் தமிழக பாஜக தலைவர் ஆகும் கனவில் இருக்கும் சில சீனியர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications