பாஜக-அதிமுக மோதல்.. பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் மோமண்ட்!
சென்னை: பாஜக அதிமுக மோதல் விவகாரம் சூடுபிடித்த நிலையில், திடீரென அதிமுக தலைமை தங்கள் கட்சியினரிடம் விமர்சிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளதாம். இதை பார்த்த நெட்டிசன்கள் பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் என்று விமர்சித்து வருகிறார்கள்.
அண்மை காலமாக பாஜக அதிமுக இடையே சுமூக உறவு இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய வார்த்தைகள், அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பலர், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

பாஜகவினர் கூட்டணி வேண்டாம் என்கிற அளவிற்கு விமர்சனங்கள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையை அப்போது கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் டெல்லி பாஜக தலைமை இருவரையும் சமாதானம் செய்து கூட்டணி தொடர்வாக அறிவிக்க வைத்தது.
இந்நிலையில் அண்மையில் டெல்லிக்கு சென்று வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவரிடம் 15 முதல் 20 சீட் பாஜக தரப்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தனை சீட்களை தர முடியாது என எடப்பாடி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய போது, அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து பேசிய வார்த்தைகள் மீண்டும் அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அண்ணாவை எச்சரித்ததாகவும், அதன்பின்னர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை கூறினார். இதற்கு செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், ஜெயகுமார் உள்பட பல்வேறு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். ஒரு கட்டத்தில் ஜெயகுமார், அதிமுக உடன் கூட்டணி இல்லை. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்தார்.
அதன்பிறகு அதிமுகவினரும், பாஜகவினரும் மாறி மாறி கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, "கூட்டணியில் சலசலப்பு எதுவும் இல்லை. கூட்டணியின் தேவை அனைவருக்கும் தெரியும்.. இங்கேயும் டிவி ஏசி இருக்கிறது. இங்கேயும் விஜிலென்ஸ் துறை இருக்கிறது. அனைவருக்கும் இங்கே பாதுகாப்பு தேவைதானே..
தனி மரம் என்றும் தோப்பாகாது.. கூட்டணி அனைவருக்கும் தேவைதான்.. முன்பு இருந்தது போல பெரும் தலைவர்கள் இருந்த காலம் இல்லை இது. எனவே இப்போது அனைவருக்குமே கூட்டணி தேவை இருக்கிறது. அதேநேரம் டிவிஏசி (தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை) மீதும் இங்கே அனைவருக்கும் பயம் இருக்கிறது.
நான் யாரையும் மிரட்டவில்லை. டிவிஏசி எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் முதல்வரும் இல்லை... எனக்குக் கூட்டணி வேண்டாம் என்பது என்ன பேச்சு. இது என்ன போக்கு.. கூட்டணி வேண்டாம் என யாரும் சொல்ல முடியாது. தனிமரம் தோப்பாகாது. அனைவரையும் அரவணைத்தே செல்ல வேண்டும். எல்லாருக்கும் எல்லாரும் தேவை. தனி மரத்தை வைத்துக் கொண்டு இருப்பேன் என்றால் புயல் வரும் போது இந்த தனிமரம் தான் காணாமல் போகும்" என்று அண்ணாமலை பேசினார்.
இந்நிலையில் கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் வேறு யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுகு தலைமை வலியுறுத்தி உள்ளது என்றும், அதிமுகவின் இந்த உத்தரவு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுகவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி மோதல்களுக்கு பின்னர், அதிமுக தலைமை வெளியிட்டதாக வெளியான செய்திகளை பார்த்த நெட்டிசன்கள் பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் மோமண்ட் என்று விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications