கூட்டணி ஆட்சி! பற்ற வைத்த பாஜக.. அடித்துக் கொள்ளும் அதிமுக! 2026 நமக்குத் தான்.. ஏக குஷியில் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அமைத்திருக்கும் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே மோதல் வெடித்திருக்கிறது. பாமக உட்கட்சி விவகாரத்தால் அதிமுக கூட்டணிக்கு வருமா என்பது தெரியவில்லை. மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாக தேமுதிக, அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறது. இப்படியாக அதிமுக கூட்டணி பலமாவதற்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தும் தவிடுபொடி ஆனதால் உற்சாகத்தில் இருக்கிறது திமுக. இதை அடுத்து அதிமுக தரப்பில் இருக்கும் கட்சிகளை திமுக தரப்புக்கு இழுக்கும் வேலைகள் துவங்கி விட்டதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையை தொடங்கி விட்டன. அதிமுக - திமுக தலைமையில் தான் தமிழ்நாடு இதுவரை தேர்தல்களை சந்தித்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இரு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன.

திமுக வந்த பிறகு தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் இதுவரை தனித்து போட்டியிட்டு வென்றதில்லை . ஏன் குறிப்பிட்ட சில தொகுதிகளை கூட வென்றதில்லை என்பது வரலாறு. இந்த நிலையில் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AIADMK BJP DMK

2026 சட்டமன்ற தேர்தல்

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணி தொடர்கிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணியே அபார வெற்றி பெற்றது. இதனால் 2026 தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, மஜக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மேலும் சிறு சிறு அமைப்புகள், கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றன. திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என அந்த கட்சிகள் வெளிப்படையாகவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி

இது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக செயலாற்றி வருகிறார். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை, அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற வரலாற்றை தொடர வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் கூட்டணி தான் பிரச்சனைக்குறியதாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இருப்பதாக ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கூறியிருக்கிறது.

அதிமுக பாஜக மோதல்

மற்றபடி கடந்த காலங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக மற்றும் சிறிய கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை கூறவில்லை. இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய கூட்டணிக்குள் பிரச்சனை முளைத்திருக்கிறது. முதல்வர் வேட்பாளர், கூட்டணி ஆட்சி என பாஜக தலைவர்களும் அதிமுக தலைவர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூற கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை தனி பெரும்பான்மையுடன் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். நான் தான் முதல்வர் வேட்பாளர் என நயினார் நாகேந்திரன் பற்றவைக்க கூட்டணியில் பிரச்சனை வெடித்திருக்கிறது. இது தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரங்களால் அந்த கட்சி சிக்கலில் மாட்டி இருக்கிறது.

பாமக உட்கட்சி பிரச்சனை

பாஜக கூட்டணி தொடர்பாகத்தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்கின்றனர். ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கலாமா என திட்டமிட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் மாநிலங்களவை சீட்டு தருகிறோம் என சொன்ன அதிமுக தங்களை ஏமாற்றி விட்டதாக அதிர்ச்சியில் இருக்கிறது தேமுதிக தரப்பு. மேலும் ஜனவரி மாதத்தில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் எனவும் அதிரடியாக சொல்லியிருக்கிறார் பிரேமலதா.

திமுக கூட்டணி வலிமை

இது தவிர்த்து பிற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர தயங்குகின்றன. இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்திருக்கிறது. தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பேரங்கள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சில கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டாலும் அது பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்படும் என்கிறனர் திமுக நிர்வாகிகள்.

விஜய் அரசியல் வரவு

தமிழக அரசியலில் புதிய வரவாக விஜய் போட்டியிடுவதால் அதிமுக வாக்கு வங்கியும், நாம் தமிழர் வாக்கு வங்கியும் பாதிக்கப்படும். அதே நேரத்தில் தங்கள் தரப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத வாக்குகள் சென்றாலும் அது தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் உற்சாகத்தில் இருக்கிறது திமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+