170+23+23+6+6+6+3.. அண்ணாமலைக்கு ரெட் கார்டு! எடப்பாடி போட்டு வைத்த கூட்டணி கணக்கு! யோசித்த பாஜக!
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில், அதிமுக தரப்பில் ஒரு முக்கிய தகவல் பரவி வருகிறது. அதாவது, அதிமுக 170, பாஜக 23, பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் தரப்பு 3, தமாகா 3 இடங்களில் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேசப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் அமமுகவும், ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி வருவது கவனிக்கத்தக்கது.
பாஜக ஆரம்பத்திலிருந்தே தங்களுக்குக் குறைந்தது 40 இடங்கள் கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது. ஆனால் அதிமுக 20 முதல் 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் சென்னைக்கு வந்து, எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

தமிழக தேர்தல் 2026
இரு தரப்பிலும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலை, கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விவகாரம், தொகுதி பங்கீடு போன்ற பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தரப்பிலிருந்து 40 தொகுதிகளின் பட்டியல் பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழனிசாமி அந்தப் பட்டியலை ஏற்கவில்லை என்றும், மாறாக தாமே ஒரு தொகுதி பங்கீடு பட்டியல் தயார் செய்து பாஜக தரப்புக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அந்த பட்டியலில் அதிமுக 170, பாஜக 23, பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே. வாசன் தரப்பு 3 இடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 தேர்தல்களின் வாக்கு சதவீதத்தை வைத்து இந்த கணக்கு தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளை ஒருங்கிணைப்பது அதிமுக பொறுப்பு எனவும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பதை பாஜக கவனிக்கலாம் எனவும் பழனிசாமி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் அவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து சொல்லக்கூடாது எனவும் நிபந்தனை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் வெளியான நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்புகள் அதிமுக தலைமையுடன் கூட்டணி வாய்ப்பே இல்லை என்று மறுபடியும் தெளிவுபடுத்தி வருவது கூட்டணி அரசியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இருப்பினும், இந்த ஆலோசனைகள் குறித்து பியூஷ் கோயல், பழனிசாமி உள்ளிட்ட யாரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை.
அண்ணாமலை சர்ச்சை
எனவே, இந்த தகவல்கள் எவ்வளவு உண்மை என்ற கேள்வியும் எழுகிறது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகே கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தெளிவான முடிவு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதே நேரத்தில் இன்னொரு தகவலும் அதிமுக வட்டாரத்தில் உலாவுகிறது. அதாவது அண்ணாமலையை எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற கூடாது என்பதுதான். அதனால்தான் நேற்று எடப்பாடி உடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும், அதற்கு பிறகு நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்கின்றனர். எடப்பாடியை முதல்வராக்குவேன் என அண்ணாமலை பேசினாலும், கடந்த காலங்களில் எடப்பாடியை மிகக் கடுமையாக விமர்சித்ததால் அவர் கடும் ஆத்திரரத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அண்ணாமலைக்கு ரெட் கார்டு போட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications