பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்!
சென்னை: சென்னையை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்திலும், திமுகவிலும் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மா.செக்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே வேலுமணி, தங்கமணி கழகத்திற்குள் கிளப்பிய அதிர்வலைகள் அடங்கவில்லை. அதற்குள் கூடாரமே காலியாகும் விதமாக மா.செக்கள் கட்சியை விட்டு போவதை எடப்பாடி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனவேதான் அவசர அவசரமாக இந்த மீட்டீங்கை நடத்தியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளின் தாக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், அதிமுகவை கடுமையாக பாதித்திருக்கிறது. அதிமுகவின் 54 ஆண்டுகால அரசியலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக இழந்திருப்பது இது இரண்டாவது முறை. மட்டுமல்லாது அதிமுகவின் வாக்கு வங்கி பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்திலும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தோல்வி என்றுதான் கணக்கில் வரும். எனவே எடப்பாடி கடும் அப்செட்டில் இருக்கிறார்.
இது போதாது என, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவளித்தது, 4 எம்எல்ஏக்களின் ராஜினாமா, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி தலைமையில் புதிய அணி உருவானது என அடுத்தடுத்த ஷாக், எடப்பாடியை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
கட்சியை விட்டு போகும் முக்கிய புள்ளிகள்
என்னதான் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும், கட்சியில் அவர்கள் வகித்த பதவியை திரும்ப தரும் எண்ணத்தில் எடப்பாடி இல்லை. எனவே, தவெகவில் இணைந்துவிடலாமா என்று மணி டீம் யோசிக்க, அங்கிருந்தும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் திமுகவுக்கு தாவ ரெடியாகி வருவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள் அடிபட்டிருக்கின்றன. இந்த செய்தியை கேட்டு எம்ஜிஆர் மாளிகையின் அஸ்திவாரமே ஆடிப்போயிருக்கிறது.
சென்னையில் காலியாகும் கூடாரம்
இது போதாது என்று, சென்னை மாவட்ட செயாளர்கள் சிலர் தவெகவுக்கும், திமுகவுக்கும் தாவ யோசித்திருக்கிறார்களாம். சென்னை மாவட்ட செயலாளர்களான ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் திமுகவில் இணைய காத்திருக்கிறார்கள். அதேபோல சென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் ஐக்கியமாக காத்திருக்கிறார்கள். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அதிமுக முன்னாள் அமைப்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், சிவகங்கை மா.செ செந்தில்நாதன் தவெகவில் இணைய இருக்கின்றனர்.
அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி
இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியைடந்திருக்கிறார். ஏற்கெனவே தனது தலைமையில் ஏகப்பட்ட தோல்வியை கட்சி சந்தித்திருக்கிறது. இப்படி இருக்கையில் முக்கிய கைகளும் கட்சியலிருந்து விலகிவிட்டால் தனித்துவிடப்பட்டதாக ஆகிவிடுவோமா என்கிற அச்சம் எடப்பாடியை ஆட்டுவித்திருக்கிறது என்றும், இந்த பின்னணியில்தான் அவசர அவசரமாக இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை எடப்பாடி கூட்டியிருக்கிறார் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்












Click it and Unblock the Notifications