பாஜகவின் அக்னிபரீட்சையா? அதிமுகவின் கூட்டணி அழைப்பா?.. நடுவே சிக்கித் தவிக்கும் தேமுதிக!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு, அதிமுக இன்றைய தினம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கெனவே இரு முறை அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிக கேட்ட மக்களவை தொகுதி எண்ணிக்கைகள் கொடுக்கப்படவில்லை என்பதால் அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதனிடையே தேமுதிக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் அந்த தகவலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மறுத்துள்ளார். இந்த நிலையில் அதிமுக, தேமுதிகவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் யார் கொடுக்கிறார்களோ அவர்களுடனே கூட்டணி என பிரேமலதா அறிவித்திருந்தார். உடனே அதிலிருந்து யூடர்ன் போட்ட அவர் அது கட்சி மாவட்டச் செயலாளர்களின் விருப்பம். ஆனால் கட்சி தலைமை 14+1 என்ற தொகுதிகளை கேட்கவில்லை என்றார்.
அதிமுகவுடன் தேமுதிக: இதையடுத்து அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தைக்கு சென்றது. அப்போது 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் கேட்டது. அதற்கு அதிமுகவோ, "7 மக்களவை தொகுதிகளில் 4 தொகுதிகளை கொடுக்கிறோம். ஆனால் மாநிலங்களவை சீட் கொடுக்க முடியாது. ஒரு மாநிலங்களவை எம்பியை பெற 34 எம்எல்ஏக்களின் பலம் தேவைப்படுகிறது.
அதிமுகவில் இருப்பதோ 66 தான். எனவே எங்களுக்கு கிடைப்பதே ஒரு மாநிலங்களவைதான். அதை எங்கள் முன்னாள் நிர்வாகிகளுக்கு கொடுக்க வேண்டும். அப்படியிருக்க உங்களுக்கு கொடுத்துவிட்டு நாங்கள் என்ன செய்வது" என அதிமுகவினர் கேட்டனர். மேலும் "வேண்டுமானால் கூடுதலாக ஒரு மக்களவை தொகுதியை தருகிறோம்" என ஒரு ஆஃபரையும் அதிமுக கொடுத்தது.
மாநிலங்களவை எம்பி: எப்படியும் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை பெற்றேத் தீர வேண்டும் என முனைப்பில் தேமுதிக இருக்கிறது. இதனால் பாஜகவுடன் தேமுதிகவின் மூத்த நிர்வாகிகள் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் மாநிலங்களவை சீட் கேட்ட போது பாஜக ஒரு நிபந்தனை வைத்ததாம்.
அதாவது, "நீங்கள் (தேமுதிக) மக்களவைத் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலாவது வென்று காட்டுங்கள். பிறகு மாநிலங்களவை சீட் குறித்து பேசலாம்" என கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மறுத்துள்ளார்.
அதிமுக அழைப்பு: இதை அறிந்த அதிமுக தற்போது தேமுதிகவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது. இதற்கு தேமுதிக என்ன முடிவு எடுக்கும் என தெரியவில்லை. ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு அதிமுக நிச்சயம் இறங்கி வராது. காரணம் அந்த சீட்டுக்காக ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது மாநிலங்களவை எம்பி சீட் நிச்சயம் அதிமுகவுக்குத்தான். ஏற்கெனவே தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் கொடுப்பதாக இருந்த நிலையில் கூடுதலாக 1 மக்களவை தொகுதியை தருவதாகவும் மாநிலங்களவை சீட் கொடுக்கப்படாது என்றும் அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். எனவே 4+1+1 என்ற கணக்கில் வேண்டுமானால் 6 மக்களவை தொகுதிகளை வைத்துக் கொள்ளுங்கள், ராஜ்யசபா சீட்டுக்கு ஆளை விடுங்கள் என அதிமுக சொல்லும் என தெரிகிறது.
பெரிய கட்சியே இல்லை: அதிமுக கூட்டணியிலும் பெரிய கட்சிகள் இதுவரை வரவில்லை. பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 7 மக்களவை தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக கூறிய நிலையிலும் அக்கட்சி டீலிங்கிற்கு ஒத்து வரவில்லை. தேமுதிகவை போல் மாநிலங்களவை சீட் கேட்டது. இதற்கு அதிமுக மறுத்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications