உக்ரைனில் தவிக்கும் தமிழர்கள்.. 16 ஆயிரம் பேரை மீட்க தேவை நடவடிக்கை..திடீர் கோரிக்கை வைக்கும் ஓபிஎஸ்
சென்னை : ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 5 ஆயிரம் தமிழர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்னமும் உக்ரைன் தலைநகர் கீவில் தான் உள்ளார் எனவும், அவர் தலைநகரை பாதுகாப்பதற்கான ராணுவ நடவடிக்கைகளை நேரடியாக ஒருங்கிணைத்து வருகிறார் என உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது உயிருக்கு குறி வைக்கப்பட்டு உள்ளது என சில தினங்களுக்கு முன்பே ஜெலன்ஸ்கி கூறியிருந்த நிலையில் , அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் போரை ஒருங்கிணைத்து வருகிறார்.

அரசுகள் திட்டம்
இந்நிலையில் போர் காரணமாக ஏராளமானோர் உக்ரனை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காக தங்கியிருந்த நிலையில், போரால் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவாக மக்களை அழைத்து வர மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றனர்.

அரசு நடவடிக்கை
ஏற்கனவே இரண்டு விமானங்களில் மும்பை மற்றும் டெல்லிக்கு உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் மற்றும் அங்கே வசித்தவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து ருமேனியா போலந்து மற்றும் பிற நாடுகளின் வழியே இந்திய மக்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தேவைக்கேற்றபடி விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது

மாணவர்களின் வீடியோ
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக அங்கு படிக்க சென்ற தமிழகம்- புதுச்சேரி மாணவர்கள் அங்குள்ள பாதாள அறை மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த போர் காரணமாக தங்களது நிலை குறித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மாணவர் சந்துரு, தமிழக மாணவர்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் நாங்கள் ரஷ்யா எல்லை பகுதியில் உள்ளோம் என்றும், குண்டு சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருப்பதாக கூறி வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஓபிஎஸ் கோரிக்கை
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 5 ஆயிரம் தமிழர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளின் ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
