எடப்பாடி போட்டதெல்லாம் ஃபுல் டாஸ் தான்.. ஆனால் நோ பால்! சிக்ஸராக அடிக்கும் திமுக.. கோட்டையில் ஓட்டை!
சென்னை: கட்சியில் அதிகாரத்தைப் பிடித்துவிட்ட போதிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. உட்கட்சிப் பிரச்சனை, பாஜக கூட்டணியில் பிரச்சனை, ஆளும் திமுகவின் நெருக்கடி எனப் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் அவர் தற்போது சீனியர்கள் கட்சி தாவி வருவதால் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஏற்கனவே, மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்டோர் திமுகவுக்குத் தாவி இருக்கும் நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் திமுகவுக்குத் தாவ இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் தலைவர்களைத் தட்டித் தூக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகளால் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

அதிமுக நெருக்கடி
கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அதிமுகவில் இருக்கும் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் எதிர்கொள்ள, கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற பேச்சும் வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்திப் பேசிய செங்கோட்டையனைக் கட்சிப் பதவிகளிலிருந்து தூக்கி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கொங்கு மண்டலத்தின் முகமாக இருப்பவர் செங்கோட்டையன்.
எடப்பாடி பழனிசாமி
அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஆனால் ஜெயலலிதா காலத்தில் அரசியலுக்கு வந்த எடப்பாடி செங்கோட்டையனை நீக்கியது கொங்கு வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கோட்டையனுக்கு ஆதரவாக மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கைகோர்க்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜகவும் வலியுறுத்தி வருவது கட்சியிலும் கூட்டணியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை அதிகரித்து வருகிறது.
திமுக
இது ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியான திமுக அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வலுவான கூட்டணி அமையக்கூடாது, கட்சியிலிருக்கும் சீனியர்களைத் தட்டித் தூக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம். அதற்கேற்றாற்போல் திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்திருக்கின்றனர்.
அதிமுக சீனியர்கள்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடுகளின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவரும் திமுகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவில் பலம் வாய்ந்த மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்கள் ஏற்கனவே திமுக பக்கம் தாவி இருக்கும் நிலையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதையும் கவனிக்க வேண்டும். சேகர்பாபு, செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, தோப்பு வெங்கடாசலம், தங்க தமிழ்ச்செல்வன் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
கொங்கு மண்டலம்
இதனால் அதிமுக பலமாக இருந்த மாவட்டங்களில்கூட தற்போது திமுகவின் கை ஓங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. கோவை மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அதிமுகவில் முக்கிய சீனியர் ஒருவரை திமுகவில் இணைய வைப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தாவல்
கடந்த தேர்தலில் அதிமுக கௌரவமான இடங்களைப் பெறுவதற்குக் கொங்கு மண்டலம் மிக முக்கியக் காரணம். குறிப்பாகக் கோவையில் அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இந்த நிலையில் அந்தக் கோட்டையில் ஓட்டை விழும் வகையில் கொங்கு மண்டலத்தில் முக்கியமாக இருக்கும் அதிமுக நிர்வாகிகளை திமுகவில் இணைப்பதற்கான வேலையைத் தொடங்கி இருக்கிறது அக்கட்சித் தலைமை. இதையடுத்து பல சீனியர்கள் திமுகவுக்குத் தாவலாம் எனச் சொல்லப்படும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications