மீண்டும் மா.செக்களை திரட்டும் எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் 2 நாள் கூட்டம்.. தேர்தலுக்கு ரெடி?
சென்னை: சென்னையில் வரும் மே 29, 30 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை ஆலோசனை கூட்டத்திற்கு வருமாறு அழைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29.5.2025, 30.5.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 29, 30 ஆகிய இரு நாள்களும் காலை, மாலை என இரு நேரங்களிலும் கலந்துகொள்ள வேண்டிய மாவட்டப் பொறுப்பாளர்களின் விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/B2J9i52CP3
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 16, 2025
தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதே கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருகிறது திமுக. அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கத் தொடங்கியதில் இருந்து, கூட்டணிக்கு கட்சிகள் வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. அதிமுக கூட்டணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது.
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலுக்கு பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதற்காக கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏக்களுக்கு ஸ்பெஷல் விருந்தும் வைத்து கவனித்தார். இந்நிலையில் தான் மீண்டும் இரண்டு நாட்களில் மாவட்டங்களைப் பிரித்து தனித் தனியாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications