இது மட்டும் நடக்கலைன்னா.. 4ம் இடத்துக்கு போயிடுவோம்.. எடப்பாடிக்கு போன எச்சரிக்கை.. போச்சே!
சென்னை: பாமக இல்லையென்றால் தமிழ்நாட்டில் அதிமுக சில தொகுதிகளில் 3-4ம் இடங்களுக்கு செல்லும் . பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவை சேர்ந்த விஐபி ஒருவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம். அதன் மூலமே இந்த கூட்டணி உருவாகி வருகிறதாம்.
எடப்பாடி விடாப்பிடி: இந்த நிலையில்தான் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
பேட்டி: ஒன்இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த பாஜகவிற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஓ பன்னீர்செல்வம்தான். அவருக்கு முக்குலத்தோர் சப்போர்ட் உள்ளது. அவர் இருந்தால் எடப்பாடியை எளிதாக பாஜக வீழ்த்த முடியும். இதனால் அவரை கண்டிப்பாக பாஜக கூட்டணியில் எடுத்துக்கொள்ளும். இது போக பாமக கூட்டணிக்கு தேவை. பாமக வந்தால் தேமுதிகவையும் கூட்டணிக்கு அழைக்க வேண்டும்.
பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியால் வடமாநிலங்களில் 2ம் இடம் வர முடியாது. பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது.
10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தும் கூட.. அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட பாமக பெரிதாக அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் விசிக - திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அப்படிப்பட்ட பாமகவின் கதவை அதிமுக தட்டிக்கொண்டு இருக்கிறது. பாமக இருந்தால்தான் 20 இடங்களில் அதிமுக இரண்டாம் இடமாவது வரும் .
கூட்டணி: எப்படியாவது இரண்டாம் இடம் வந்துவிட வேண்டும் என்பதில்தான் அதிமுக உறுதியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே பாமகவின் உதவியை நாடிக்கொண்டு இருக்கிறது அதிமுக. நாம் தமிழர் வேறு தீவிரமாக போட்டியிட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்கள் வாக்குகளை பிரித்தால் கண்டிப்பாக எடப்பாடி 3ம் அல்லது 4ம் இடத்திற்கு கூட எடப்பாடி செல்வார்.
அப்படி சென்றால் எடப்பாடி அரசியலில் படுதோல்வி அடைவார். 2026ல் கடுமையான பின்னடைவை சந்திப்பார். பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. விசிக உடன் இருக்கும் வெற்றி கூட்டணியை திமுக வேண்டாம் என்று சொல்லாது.
இதுவரை தமிழ்நாட்டில் பாமகதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அதனால் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
எப்படியாவது கெஞ்சியாவது பாமகவை கூட்டணியில் கொண்டு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications