ஏங்க.. பந்து மீண்டும் நம் பக்கம் வருது! பண்ருட்டியாரை அழைத்த ஓபிஎஸ்! எடப்பாடியை வளைக்கும் "காளகஸ்தி"
சென்னை: அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி தரப்பில், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி உறுப்பினர் என கூறி வருவதாகவும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வாதிடப்பட்டது.
மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஆலோசனை: இந்த நிலையில், இது குறித்து பன்ருட்டி ராமச்சந்திரனிடம் நேற்று இரவு விவாதித்துள்ளார் ஓபிஎஸ் ! அப்போது, "பந்து, மீண்டும் நம் பக்கம் வருகிறது. என்ன மாதிரி பதிலளிக்கலாம் என சட்டரீதியிலான பாயிண்டுகளை ஆராய்வோம்" என்று சொல்லியுள்ளாராம் பன்ருட்டி ராமச்சந்திரன். இந்த வாரத்தில் இருவரும் சந்தித்து எடப்பாடிக்கு எப்படி செக் வைக்கலாம் என ஆலோசித்து முடிவெடுக்கவிருக்கின்றனர் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
அதிமுகவை கைப்பற்றுவதில் ஏற்பட்டப் பின்னடைவு, மக்களை சந்தித்து நீதி கேட்கும் சுற்றுப்பயணத்தை தொடங்க முடியாத சூழல், அதிமுக அரசியலில் ஏறுமுகமே இல்லாததால் சோர்வடைந்துள்ள ஆதரவாளர்கள் ஆகிய பிரச்சனைகளால் அண்மைகாலமாக நொந்தபோயிருந்த ஓபிஎஸ்சுக்கு, கோர்ட் அனுப்பியிருக்கும் நோட்டீஸ், மீண்டும் அதிமுகவில் பஞ்சாயத்தை நடத்தும் வாய்ப்பை தந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தான், காளகஸ்தி சென்று பூஜை செய்திருக்கிறார் ஓபிஎஸ். பூஜை நடத்தியபிறகு கோவில் அர்ச்சகர்கள் கொடுத்த நம்பிக்கையும், பன்ருட்டி ராமச்சந்திரன் கொடுத்த நம்பிக்கையும் ஓபிஎஸ்சுக்கு மீண்டும் தெம்பைக் கொடுத்துள்ளதாம்.
ஓபிஎஸ்சின் நடவடிக்கையை ஃபாலோ பண்ணி வரும் அதிமுகவி ஐ.டி. விங்க் தரப்பினர், "நம்பிக்கைத்தான் அரசியல். பார்க்கலாம். எடப்பாடி போட்டுள்ள இந்த வழக்கோடு ஓபிஎஸ்சின் சேப்டர் முடிவுக்கு வந்துவிடும். பொறுத்திருந்து பாருங்கள் " என கமென்ட் அடிக்கிறது.












Click it and Unblock the Notifications