'இதை கவனிக்க' மறந்துவிட்டதா.. தேமுதிகவை நழுவ விட்ட அதிமுக.. ராஜதந்திர ரீதியாக தோல்வி?
சென்னை: என்னதான் வாக்குவங்கி தேமுதிகவிற்கு சரிந்துவிட்டது என்று மதிப்பீடுகள் செய்தாலும், ஒவ்வொரு கிராமத்திலும், வார்டு வாரியாக அடிமட்ட அளவில் கிளைகளை வைத்துள்ள இயக்கம் தேமுதிக. தொகுதிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகளை தேமுதிக மூலம் பெற்றிருக்க முடியும். எனவே அதிமுக தனது கூட்டணிக்குள் இழுத்திருக்க வேண்டும். தேமுதிகவை நழுவ விட்டதன் மூலம் ராஜதந்திர ரீதியாக அதிமுக தோல்வி அடைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது,.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி இருக்கிறது. பாமகவை விட அதிகப்படியான தொகுதிகள் கேட்ட நிலையில் அத்தனை தொகுதிகள் ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டது.
தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திமுகவுடன் சேர ஆர்வம்
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்னும் ஒருசில நாளில் தொடங்க உள்ளது. அடுத்த 10 நாட்களில் வேட்பாளர்கள் அறிவிப்பு, எந்தெந்தத தொகுதியில் போட்டி என திமுக மற்றும் அதிமுக மற்றும் மநீம கூட்டணிகள் அறிவித்துவிடும். திமுகவுடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றன.

2006 வரலாறு
ஆனால் அதேநேரம் அதிமுக கூட்டணியில் தேமுதிக விலகி இருப்பது அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2005ம் ஆண்டு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 2006ல் தேர்தலில் போட்டியிட்ட போது, அதிமுக தோல்வி அடையவும், திமுக மைனாரிட்டியாக ஆட்சி நடத்தவும் தேமுதிகதான் காரணமாக இருந்தது.

விஜயகாந்த்
விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கிராமங்களில் உள்ள வார்டுகள் வரை அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் அப்படியே தேமுதிகவில் இணைந்தனர். 2011ம் ஆண்டு அதிமுகவினர் பலர் தேமுதிக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். தொண்டர்களின் விருப்பதை ஏற்று விஜயகாந்தை அழைத்து கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. 44 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் ஆனார்

படுதோல்வி
இப்படி வலுவாக இருந்த தேமுதிக என்ற இயக்கம் 2016ம் ஆணடு சட்டசபை தேர்தலில மக்கள்நலக்கூட்டணி என்ற பெயரில் தனி அணியை உருவாக்கியது. ஆனால் பெரிய அளவில் வாக்கு சதவீதத்தை இழந்தது. 2019ல் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் துரதிர்ஷ்டம் தேமுதிகவை துரத்தியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்குசதவீதம் மேலும் குறைந்தது.

குறைந்த தொகுதி
இதை எல்லாம் காரணம் காட்டி 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிகவிற்கு குறைந்த சீட்கள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. ஆனால் அதேநேரம் பாமகவிற்கு அதிக இடங்களை கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக, கூட்டணியைவிட்டு இன்று விலகி உள்ளது. அதிமுகவிற்கு எதிராக வேலை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

ராஜதந்திரம்
ஒவ்வொரு கிராமத்திலும், வார்டு வாரியாக அடிமட்ட அளவில் கிளைகளை வைத்துள்ள இயக்கம் தேமுதிக. தொகுதிக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகளை தேமுதிக மூலம் பெற்றிருக்க முடியும். எனவே அதிமுக தனது கூட்டணிக்குள் இழுத்திருக்க வேண்டும். திமுக கூட்டணி வலுவாக உள்ள இந்த நேரத்தில் தேமுதிகவை நழுவ விட்டதன் மூலம் ராஜதந்திர ரீதியாக அதிமுக தோல்வி அடைந்திருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications