"விஜய் நாக்கு புழுத்துப் போகாதா?".. சாபம் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்பணன்!
சென்னை: “சினிமா டிக்கெட்டை பல மடங்கு அதிக விலைக்கு விற்றும், லாட்டரி சீட்டிலும் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை சுரண்டி கட்சியை ஆரம்பித்து விட்டு எடப்பாடி பழனிசாமி மோசம் என கூறுகிறீர்களே உங்களது நாக்கு புழுத்து போகாதா?” என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிப் பேசினார். கொள்கையை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு யாரிடமும் சரணடையும் வழக்கம் தனக்கு இல்லை என்றும், அதிமுக தலைமை தற்போது அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையை மறந்துவிட்டது என்றும் பேசினார். மேலும், ஏற்கனவே மக்கள் பலமுறை டெலீட் செய்தவர்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் எனப் பேசினார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் விஜய்யை சரமாரியாக விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும் பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.சி.கருப்பணன், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன் பேசுகையில், “ரசிகர் மன்றத்திற்கு 100 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்று, 500 கோடி சம்பாதித்து உள்ளீர்கள். உங்களது கூட்டத்திற்கு வந்த 41 பேரின் குடும்பம் நாசமாகப்போய் உள்ளது. அவர்களது வீட்டிற்கு கூட உங்களால் செல்ல முடியவில்லை, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தால் போதுமா? அதில் வரும் வட்டியை வைத்து அந்த குடும்பம் பிழைக்க முடியுமா?
உயிரிழந்த தொண்டரின் வீட்டுக்கு நேரில் செல்ல கூட முடியவில்லை நீங்கள் ஒரு கட்சியை நடத்துகிறீர்கள், அந்த கட்சி மோசம், இந்த கட்சி மோசம் என கூறுகிறீர்கள். முதலில் உன்னை திரும்பி பார், நீ எப்படி வாழ்ந்தாய் என நினைத்துப் பார்.
ஒரு டிக்கெட் 2000 ரூபாய்க்கு ஏன் விற்கிறீர்கள், 100 ரூபாய் டிக்கெட்டு 200 ரூபாய் கூட இருக்கலாம். ஆனால் 99% அதிகமாக விலை வைத்து விற்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு பணம் சேருகிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் வரை ஐந்து மணி நேரம் பேருந்தில் பயணம் செய்கிறார். படுத்துவிட்டார் அவரால் எழுந்திரிக்க முடியவில்லை.
கூட ஒருவர் இருக்கிறார் ஒரு பைசாவிற்கு லாட்டரி டிக்கெட் அடித்து உலகம் பூரா விற்கிறார்கள், இப்படி எல்லாம் சம்பாதித்து விட்டு நாட்டு மக்களை சுரண்டி எடுத்து லட்சக்கணக்கான கோடியை கையில் வைத்துக்கொண்டு அவங்க ஒரு கட்சியை ஆரம்பித்து எடப்பாடியை மோசம் என சொல்கிறீர்கள் உங்கள் நாக்கு புழுத்துப் போகாதா?
நியாயமாக பேசுங்கள், உண்மையை பேசுங்கள். இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. நீங்கள் ஒரு கட்சி நடத்துகிறீர்கள், எல்லாரையும் கேலி கிண்டல் பேசுகிறீர்கள். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அடித்தட்டு மக்களின் வலியை அறிந்தவர்கள்.
பிரதமர் மோடி ஒரு டீ கடை நடத்தி வந்தவர். வறுமையின் நிலை உணர்ந்தவர். ஜெயலலிதா தஞ்சாவூர் சென்றபோது அங்கு வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களைப் பார்த்த போது தங்கம் இல்லாமல் தாலியாக வெறும் மஞ்சள் கயிறு மட்டும் கட்டி இருந்தனர் உடனடியாக வந்து தாலிக்கு தங்கம் திட்டத்தை அறிவித்தார்” எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications